சென்னை, அக்டோபர் 22 – தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரும், ஒளிப்பதிவுத் துறையில் புதிய பரிமாணங்களை அறிமுகப்படுத்தியவருமான ஒளிப்பதிவாளர் அசோக்குமார் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார்.
தமிழின் மிக முக்கிய திரைப்படங்களான நெஞ்சத்தை கிள்ளாதே, உதிரிப்பூக்கள், ஜானி உள்பட ஏராளமான படங்களுக்கு அசோக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படங்களில் எல்லாம் அவர் இயக்குநர் மகேந்திரனுடன் இணைந்து பணியாற்றினார்.
மலையாள சினிமாவும் இவரது திறமையை அதிகளவில் பயன்படுத்திக் கொண்டது. பல மலையாளப் படங்களில் ஒளிப்பதிவு பணியாற்றியிருக்கின்றார்.
சில்க் ஸ்மிதாவை வைத்து இவர் இயக்கிய, “அன்று பெய்த மழையில்” படம் அதன் ஒளிப்பதிவுக்காக இன்றும் பேசப்படுகிறது.
கடந்த ஜுன் மாதம் அசோக்குமார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் அவருக்கு சிகிச்சை தொடர்ந்தது.
இந்நிலையில் இன்று காலை அவர் சென்னையில் மரணமடைந்தார். அவருடைய மகன் ஆகாஷ் ஒளிப்பதிவாளராக ‘தொட்டால் பூ மலரும்’ என்ற படத்தில் அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.