கொழும்பு, அக்டோபர் 22 – விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கியது அரசியல் ரீதியான முடிவல்ல என்றும், அது நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு என்றும் ஐரோப்பிய ஒன்றியம் (European Union) தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என அறிவிக்க இயலாது என அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து இது இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரசியல் ரீதியான நடவடிக்கை என அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியது.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகவும், அதன் வங்கிக் கணக்குகளை முடக்கியும் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரித்த அதன் பொது நீதிமன்றம், புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்று கூற முடியாது என கடந்த வாரம் அறிவித்தது.
எனினும் அந்த அமைப்பின் பண பரிமாற்றங்கள் (வங்கிக் கணக்குகள்) மீதான தடையை மட்டும் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.
“இது நீதிமன்றம் எடுத்துள்ள சட்ட ரீதியிலான முடிவு. ஐரோப்பிய யூனியன் நாடுகள் மேற்கொண்டுள்ள அரசியல் முடிவு அல்ல,” என்று கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடக மற்றும் தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.