பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 27 – மலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் நடைபெறும் கூட்டத்தில் தாம் பங்கேற்று பேசப்போவது நிச்சயம் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறும் பகுதி மின் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
“பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அன்வார், “மாணவர்களால் அக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் அதில் பங்கேற்பேன்” என்றார்.
இதற்கிடையே பல்கலைக்கழக மாணவர் விவகாரத்திற்கான உதவி துணைவேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் ரோஹானா யூசுப் கூறுகையில், மின் பராமரிப்பு பணிகளுக்கு உதவும் வகையில் அனைத்து ஊழியர்களும் மாலை 4 மணிக்கே தங்கள் பணியை முடித்துக் கொண்டதாகத் தெரிவித்தார்.
அன்வார் இப்ராகிம் உரையாற்றவிருந்த இன்றைய நாள் பார்த்து மின் பராமரிப்பு பணிகள் என்ற பல்கலைக் கழகத்தின் அறிவிப்பு, அன்வாரின் உரை நிகழ்ச்சியை தடைசெய்யும் ஒரு மறைமுகமான முயற்சி எனக் கருதப்படுகின்றது.
பல்கலைக்கழக இளநிலை பட்டதாரிகள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கூட்டம் இன்றிரவு 9 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிலையில் பல்கலைக்கழகத்திற்கான இரு நுழைவுப் பகுதிகளும் திறந்துள்ள போதிலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையும் வாகனங்களில் பல்கலைக்கழகம் அளித்துள்ள நுழைவு அனுமதிச் சீட்டுகள் உள்ளனவா என்று பரிசோதிக்கப்படுகிறது.