கோலாலம்பூர், அக்டோபர் 31- நீதியை நிலைநிறுத்தும் எந்தவொரு நீதிமன்றமும் தன்னை குற்றவாளி என தீர்ப்பளிக்காது என தாம் நம்புவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.
தன் மீதான ஓரினச் சேர்க்கை வழக்கு தொடர்பில் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்களுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது தரப்பில் நியாயமான வாதங்கள் முன்வைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
“என்னை விடுவிப்பதைத் தவிர வேறு வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. எனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை அதிகரிக்க வேண்டும் என அரசுத் தரப்பு கோரியுள்ளது. ஆனால் எனது தரப்பின் ஆணித்தரமான வாதங்களுக்குப் பின்னர் அக்கோரிக்கை நீர்த்துப் போய்விட்டது,” என்றார் அன்வார்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் முகமட் ஷஃபி, அன்வார் தரப்பின் வாதங்களில் 85 விழுக்காடு பழைய அம்சங்களையே கொண்டிருந்தன என்றார்.
“15 விழுக்காடு வாதம் மட்டுமே புதிய அம்சங்களுடன் கூடியவை. எனது வாதத்தை தனித்து முன்வைப்பேன். ஆனால் வெள்ளிக்கிழமைக்குள் எனது வாதங்களை முழுமையாக முடிக்க இயலுமா என்பது சந்தேகம்தான்,” என்றார் முகமட் ஷஃபி.
எனவே அன்வார் மீதான வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமையும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.