இஸ்லாமாபாத், நவம்பர் 4 – பாகிஸ்தான், இந்தியா இடையே உள்ள வாகா எல்லையில் நேற்று முன்தினம் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் இதுவரை 61-பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனிடையே அந்த பகுதியில் மேலும் ஒரு சக்தி வாய்ந்த வெடிகுண்டு பாதுகாப்புப் படையினரால் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
வாகா எல்லையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு அல்-காய்தாவோடு தொடர்புடைய ஜுந்துல்லா பயங்கரவாத அமைப்பு, ஜமாத்-உல்-அஹ்ரார் மற்றும் மஹர் மெஹஸத் ஆகிய அமைப்புகள் தனித்தனியான முறையில் பொறுப்பேற்றுள்ளன.
எனினும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே இன்று மொகரம் திருநாள் இஸ்லாமியர்களால் கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில் வாகா எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது.
பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய எல்லை பகுதியிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வழக்கமாக நடைபெறும் எல்லையோரப் பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பும், பாகிஸ்தானின் வேண்டுகோளை அடுத்து நடத்தப்படவில்லை.
அடுத்த இரண்டு நாட்களுக்கு இரு நாட்டு எல்லை வீரர்களின் அணிவகுப்பு நடைபெறாது என்று எல்லை பாதுகாப்புப் படையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.