புதுடெல்லி, நவம்பர் 4 – டெல்லியில் இருந்து கோலாலம்பூருக்கு வந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் தாய்லாந்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அதில் இருந்த 129 பேர் உயிர் தப்பினர்.
மலேசியாவின் மலிண்டோ ஏர் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் ரக விமானம், நேற்று முன்தினம் இரவு 10.05 மணியளவில், டெல்லி இருந்து கோலாலம்பூரை நோக்கி வந்தது. 3 குழந்தைகள், 8 விமான பணியாளர்கள் உட்பட மொத்தம் 129 பேர் அதில் பயணம் செய்தனர்.
மியான்மர் அருகே சென்றபோது, விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விபரீதம் ஏற்பட உள்ளதை அறிந்த பயணிகள் பெரும் பதற்றம் அடைந்தனர். விமானிகள் உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, நிலைமை குறித்து விளக்கம் அளித்தனர்.
தரையிறங்குவதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி தருமாறு அதிகாரிகளிடம் விமானிகள் கேட்டுக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தரை இறங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.
இதற்கிடையே, பயணிகள் அனைவருக்கும் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டது. விமானிகள் மிகுந்த கவனத்துடன், விமானத்தை ஓட்டிச் சென்று, அசம்பாவிதம் ஏற்படாத வகையில், பாங்காக் விமான நிலையத்தில் அதிகாலை 2.25 மணிக்கு பத்திரமாக தரை இறக்கினர்.
அதன் பின்னரே, விமானத்தில் இருந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அவர்கள் அனைவரும் மற்றொரு விமானத்தில், நேற்று மதியம் 3.45 மணியளவில் மலேசியாவுக்கு வந்தனர்.