“மேல் ஒய்” என்ற அந்த மரபணு மாதிரி அன்வாருடையது அல்ல என்று அவர் நிரூபிக்க விரும்பினால், மரபணு சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷஃபி அப்துல்லா நீதிமன்றத்தில் கூறினார்.
“அன்வார் இரகசியமாக ஆஸ்திரேலியாவிற்கோ அல்லது ஐரோப்பாவிற்கோ சென்று மரபணு சோதனை மேற்கொள்ளட்டும். தனது மரபணுவுடன், அந்த ‘மேல் ஒய்’ மரபணு மாதிரியை ஒப்பிட்டுப் பார்க்கட்டும். இதை நீதிமன்றம் அனுமதித்தால் நிச்சயமாக இந்த வழக்கிற்கு அது ஒரு கூடுதல் ஆதாரமாக இருக்கும்” என்று ஷஃபி தனது தரப்பு வாதத்தில் தெரிவித்தார்.
ஓரினப்புணர்ச்சி வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையை தலைமை நீதிபதி ஆரிஃபின் சகாரியா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு இன்று 6-ம் நாளாக நடைபெற்றது.
இந்த வழக்கு விசாரணை நாளையும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தனது முன்னாள் உதவியாளர் முகமட் சைபுல் புஹாரி அஸ்லானை ஓரினப்புணர்ச்சியில் உட்படுத்திய குற்றத்திற்காக மேல்முறையீட்டு நீதிமன்றம் தனக்கு விதித்த 5 வருட சிறை தண்டனையை எதிர்த்து அன்வார் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.