Home இந்தியா திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம்

614
0
SHARE
Ad

thirucenthurதிருச்செந்தூர், பிப்.26- திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

திருச்செந்தூர் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. காலை 6.40 மணியளவில் விநாயகர் தேர் புறப்பட்டு 7.20 மணிக்கு நிலைக்கு வந்தது. தொடர்ந்து காலை 7.25 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

ரதவீதிகள் வழியாக வலம் வந்த தேர், காலை 9.30 மணிக்கு நிலையை அடைந்தது. அதன்பின் காலை 9.50 மணிக்கு தெய்வானை அம்மன் எழுந்தருளிய தேர் வீதி உலா  வந்து காலை 11.30 மணிக்கு நிலைக்கு வந்தது.

“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ கோஷத்தை பக்தர்கள் விண்ணதிர முழங்கி, வடம்பிடித்து தேர் இழுத்தனர்.  தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தேரோட்டத்தை தொடர்ந்து இரவில் சுவாமி, அம்மன் பெரிய பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) பொ.ஜெயராமன், அலுவலகக் கண்காணிப்பாளர்  இரா.சாத்தையா மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.