Home கருத்தாய்வு முருகேசன்-சோதிநாதன் மோதலால் தெலுக் கெமாங் தொகுதியை ம.இ.கா மீண்டும் இழக்குமா?

முருகேசன்-சோதிநாதன் மோதலால் தெலுக் கெமாங் தொகுதியை ம.இ.கா மீண்டும் இழக்குமா?

815
0
SHARE
Ad

Sothi---Featureபிப்ரவரி 26 – கடந்த பொதுத் தேர்தலில் ம.இ.கா தோல்வி கண்ட நாடாளுமன்ற  தொகுதிகளில் ஒன்று போர்ட்டிக்சன் கடற்கரை நகரை உள்ளடக்கிய தெலுக் கெமாங் நாடாளுமன்ற தொகுதி.

நீண்ட காலமாக மஇகாவின் வசம் இருந்து வந்த இந்த கடலோரத் தொகுதி 2008ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் சுனாமியில் பிகேஆர் கட்சியின் வசமானது.

இங்கே மீண்டும் போட்டியிட அதன் முன்னாள் வேட்பாளர் டத்தோ எஸ்.சோதிநாதன் பலவித முன்னேற்பாடுகளுடன் தயாராகி வந்தார். கடந்த தேர்தலில் தோல்வுயற்றவர் என்பதைத் தவிர மற்ற பல அம்சங்கள் சோதிநாதனுக்கு இங்கே மீண்டும் போட்டியிட்டு வெல்ல சாதகமாக இருந்தன.

#TamilSchoolmychoice

இருப்பினும் பிகேஆர் கட்சியும் மீண்டும் இந்த தொகுதியை வெல்வதற்கு முனைப்பு காட்டி வருவதால் எதிர்க்கட்சியினரும் இங்கே பலம் வாய்ந்து காணப்படுகின்றனர். யார் ம.இ.கா வேட்பாளர் என்றாலும் மீண்டும் இந்த தொகுதியை தேசிய முன்னணி வெல்வது கடுமையான சவாலாகவே இருக்கும்.

சோதிநாதன் உள்ளூர் வாசி

முக்கியமாக சோதிநாதன் போர்ட்டிக்சனைப் பிறப்பிடமாகக் கொண்டவர். உள்ளூர் வாசி என்பதாலும், அங்கேயே வசிப்பவர் என்பதாலும் அவருக்கு ஆதரவாளர்கள், நண்பர்கள் என இந்த தொகுதி மிகவும் பரிச்சயமான ஒன்றாக இருந்தது.

ஏற்கனவே, இங்கு நடந்த இடைத் தேர்தலில் வென்றவர் – அதன் பின்னர் இந்த தொகுதியை மீண்டும் ஒரு தவணை தக்க வைத்துக் கொண்டவர் – முன்னாள் துணையமைச்சர் என்ற ரீதியிலெல்லாம் அவர் இந்த தொகுதியில் நன்கு அறிமுகமாகி இருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த பாகான் பினாங் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் கடுமையாகப் பாடுபட்டு டான்ஸ்ரீ முகமட் இசா அங்கே வெல்வதற்கு துணை புரிந்தார் என்பதால் சோதிநாதன் மீது அங்குள்ள அம்னோவினரிடத்திலும், நெகிரி மந்திரிபுசார் மற்றும் டான்ஸ்ரீ இசா ஆகியோரிடத்திலும் மிகுந்த செல்வாக்கும் உண்டு.

டான்ஸ்ரீ முகமட் இசாதான் தெலுக் கெமாங் தொகுதியின் அம்னோ தலைவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ம.இ.கா தெலுக் கெமாங் தொகுதியினரின் ஆதரவையும் சோதிநாதன் பெற்றிருந்தார். ம.இ.கா தெலுக் கெமாங் தொகுதி தலைவர் சுவா வேலுவும் சோதிநாதனுக்கு தீவிர ஆதரவாளராக இருந்து வருகின்றார்.

கடந்த 5 ஆண்டுகளாக இந்த தொகுதியில் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, தொகுதி வாக்காளர்களுடன் அணுக்கமான தொடர்புகளை ஏற்படுத்தி வந்திருந்த சோதிநாதனுக்கு இந்த முறை மீண்டும் தெலுக் கெமாங் தொகுதியை வழங்க ம.இ.கா தலைவர் பழனிவேல் விரும்பவில்லை.

2009ஆம் ஆண்டு நடந்த ம.இ.கா கட்சித் தேர்தலில் தேசியத் துணைத் தலைவர் பதவிக்காக பழனிவேலுவை எதிர்த்து மும்முனைப் போட்டியில் இறங்கியவர் சோதிநாதன் என்பதாலும், அவருக்கு தொகுதி கொடுத்து அவரை மீண்டும் ஓர் அரசியல் மையமாக உருவாக்கினால் அவர் தனியாகவோ மற்ற ம.இ.கா தலைவர்களுடன் சேர்ந்து கொண்டோ தனக்கு எதிரான அணி உருவாக்கி விடுவார் என்ற அச்சத்தாலும் பழனிவேல் சோதிநாதனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை என்று ம.இ.கா வட்டாரங்களில் கூறப்படுகின்றது.

சோதிக்கு பதிலாக முருகேசன்

அவருக்கு  பதிலாக, கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசனை இங்கே களமிறக்க பழனிவேல் செய்த  முடிவைத் தொடர்ந்து முருகேசனும் பல முறை இந்த தொகுதிக்கு வருகை தந்து நிலைமைகளைக் கண்டறிந்தார்.

மீண்டும் சுபாங் தொகுதியில் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்பதால், அவரை ஒரு பாதுகாப்பான தொகுதியில் நிறுத்துவதற்கு பழனிவேல் விரும்பினார். நீண்ட காலமாக பழனிவேல் விசுவாசியாகவும், தலைமைச் செயலாளராகவும்  இருக்கும் காரணத்தால், முருகேசனை அரசியலில் முன்னிருத்த, ஒரு முக்கிய தலைவராக உருவாக்க பழனிவேல் முனைப்பு காட்டி வருகின்றார்.

சோதிக்கு தெரியாமல் தெலுக் கெமாங் வருகை தந்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட முருகேசன் ஒரு நிகழ்ச்சியில் சோதிநாதனை நேருக்கு நேர் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டதாகவும், அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெலுக் கெமாங் ம.இ.கா. வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

“நீண்ட காலமாக இந்த தொகுதியில் நான்தான் வேலை செய்து வருகின்றேன். என்னைக் கேட்காமல், உங்களை யார் இங்கு வந்து வேலை செய்ய சொன்னது? உங்களை வேட்பாளர் என்று பிரதமர் அறிவித்து விட்டாரா?” என சோதிநாதன் முருகேசனை கடிந்து கொண்டதாகவும் ம.இ.கா வட்டாரங்கள் கூறுகின்றன.

சோதி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

இதற்கிடையில் அடிக்கடி பத்திரிக்கைகளில் சோதிநாதனின் ஆதரவாளர்களும் ம.இ.காவினரும் சோதிநாதனுக்கு ஆதரவாக அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது சில ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நஜிப் துன் ரசாக் போர்ட்டிக்சன் போலி டெக்னிக் கல்லூரிக்கு வருகை தந்த போது சோதிநாதன் ஆதரவாளர்களும் சில ம.இ.கா கிளைத் தலைவர்களும், சோதிநாதனுக்கே தெலுக் கெமாங் தொகுதியை வழங்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது கட்சி தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த ம.இ.கா தலைவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் ம.இ.கா தேசியத் தலைவர் பழனிவேல் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளால் தெலுக் கெமாங் தொகுதி மீண்டும் ம.இ.காவிடம் இருந்து பறிபோகும் எனத் தெரிகின்றது.

கட்சித் தலைமைத்துவம் தனது முடிவில் உறுதியாக இருந்து முருகேசனையே இங்கு வேட்பாளராக நிறுத்தினால், அதனால் சோதிநாதனிடமிருந்து அவரது ஆதரவாளர்களிடமிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பும் என்பதால், இந்த போட்டா போட்டியில் வாக்குகள் சிதறி மீண்டும் பிகேஆர் கட்சியே வெற்றி பெறும் வாய்ப்புக்கள் அதிகம் என உள்ளூர் ம.இ.காவினர் கருதுகின்றனர்.