திருவனந்தபுரம், நவம்பர் 6 – பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் சபரிமலை வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் பம்பையிலிருந்து சன்னிதானம் வரை பக்தர்களுடன் சேர்ந்து நடந்து செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல கால பூஜை நவம்பர் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, சபரிமலை கோயில் நடை 16-ஆம் தேதி மாலை திறக்கப்படும்.
இந்த நிலையில் நவம்பர் மாத இறுதியில் பிரதமர் மோடி சபரிமலை வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நவம்பர் 22 மற்றும் 27-ஆம் தேதிக்கு இடையே சபரிமலை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து மோடிக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேரள போலீசார் ஆலோசனையை தொடங்கியுள்ளனர். பெரும்பாலான பக்தர்கள் பம்பை வரை வாகனங்களில் வந்துவிட்டு பின்னர் அங்கிருந்து 4.5 கி.மீ. நடந்து சன்னிதானம் செல்வார்கள்.
இதே போல பிரதமர் மோடி கொச்சி வரை விமானத்தில் வந்துவிட்டு பின்னர் ஹெலிகாப்டர் மூலம் நிலைக்கல்லில் இறங்கி, கார் மூலம் பம்பை செல்லலாம் என கூறப்படுகிறது.
பின்னர் பம்பையிலிருந்து 4.5 கி.மீ. தூரம், பக்தர்களுடன் சேர்ந்து சன்னிதானத்திற்கு நடந்து செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பம்பையிலிருந்து சன்னிதானம் செல்லும் பாதை குறுகலானது மட்டுமில்லாமல் செங்குத்தான பாதையாகும். ஆகவே அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது மிகவும் சிரமம் என கூறப்படுகிறது.