கோலாலம்பூர், நவம்பர் 7 – எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரும்படி சட்டத்துறை அலுவலகத்திலிருந்து தமக்கு உத்தரவு வந்திருப்பதாக அரசு தரப்பின் வழக்கறிஞர் குழுவிற்கு தலைமையேற்றுள்ள டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா (படம்) நேற்று தெரிவித்தார்.
ஓரினப்புணர்ச்சி வழக்கில் விசாரணைக்கு பின்னர் நீதிமன்ற வளாகத்தில் இரண்டு இணையத்தள செய்தி நிருபர்களிடம் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பேசியிருப்பது தொடர்பில் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்வதற்கு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்படும்படி, சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேலிடமிருந்து தமக்கு உத்தரவு வந்திருப்பதாக ஷாபி அப்துல்லா குறிப்பிட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது தாம் சட்டக்கல்லூரியில் மீண்டும் சட்டத்துறை படிப்பை கற்க வேண்டும் என்று மிகவும் கேலியாக தம்மை பார்த்து அன்வார் அந்த இரண்டு அகப்பக்க செய்தியாளர்களிடம் விமர்சனம் செய்திருப்பதாக ஷாபி குறிப்பிட்டார்.
அன்வாரின் அந்த செய்தியை மலேசிய கினியும், தி மலாய் மெயில் இணைய செய்தித் தளமும் வெளியிட்டிருந்தது என்றும் ஷாபி குறிப்பிட்டார்.
நீதிமன்றத்திற்கு வெளியே அன்வார் பேசிய இந்த விவகாரம் நீதிமன்றத்தின் நேர்மையையும், அதன் நம்பகத்தன்மையையும் கேள்வி எழுப்புவதாக இருக்கிறது என்று ஷாபி குறிப்பிட்டார்.
இது குறித்து அன்வார் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஷாபி கேட்டுக்கொண்டார். இது குறித்து பேசிய அன்வாரின் ஓரினப் புணர்ச்சி வழக்கில் அவரது வழக்கறிஞர் குழுவிற்கு தலைமையேற்றுள்ள டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம்,
“இந்த வழக்கில் எதிர்தரப்பினர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமா? இல்லையா என்பதை பரிசீலனை செய்ய வேண்டும்” என்று ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்றுள்ள துன் அரிப்பின் ஜக்காரியாவை கேட்டுக்கொண்டார்.