Home கலை உலகம் ரியாஸ்கான் தலைமையில் ‘வல்லவர் 2014’ – அஸ்ட்ரோவின் விறுவிறுப்பான புதிய நிகழ்ச்சி!

ரியாஸ்கான் தலைமையில் ‘வல்லவர் 2014’ – அஸ்ட்ரோவின் விறுவிறுப்பான புதிய நிகழ்ச்சி!

878
0
SHARE
Ad

IMAG0715கோலாலம்பூர், நவம்பர் 17 – கடந்த வருடம் அஸ்ட்ரோ தொலைக்காட்சி வழங்கிய ‘வல்லவர் 2013’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இந்த வருடம் ‘வல்லவர் 2014’ அதை விட கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் மிகவும் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெறவுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில், தலைநகர் பிரிக்பீல்ட்சில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரபல நடிகர் ரியாஸ்கான், அஸ்ட்ரோ தமிழ் பிரிவின் மூத்த துணை நிர்வாகி டாக்டர் ராஜாமணி செல்லமுத்து, அஸ்ட்ரோ நிறுவனத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் குழு ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

#TamilSchoolmychoice

நிகழ்ச்சியின் அம்பாசிடர் ரியாஸ்கான் 

IMAG0716

இந்த நிகழ்ச்சியை வழி நடத்தவும் தலைமைவகிக்கவும் நல்ல உடற்கட்டும், வலிமையும், திறமையும் வாய்ந்த ஒரு பிரபலத்தை தேர்வு செய்ய எண்ணிய அஸ்ட்ரோ, அதற்கு முழு தகுதியானவராகத் தெரிந்த நடிகர் ரியாஸ்கானை இந்நிகழ்ச்சியின் அம்பாசிடராக (தூதர்) நிர்ணயம் செய்துள்ளது.

இது குறித்து ராஜாமணி கூறுகையில், “ரியாஸ்கான் குடும்பம் அத்தனையும் கலைக் குடும்பம். அவரது மாமியார் கமலா காமேஷ் பிரபல நடிகை, அவரது மனைவி உமா ரியாசும் மிகவும் பிரபலமான நடிகை. ஆனால் இதையெல்லாம் பார்த்து ரியாஸை நாங்கள் தேர்வு செய்யவில்லை. நாங்கள் அவரை தேர்வு செய்த ஒரே காரணம் அவரது அபாரமான உடற்கட்டு தான். இந்த நிகழ்ச்சியை வழி நடத்த இப்படிப்பட்ட ஒரு நபர் தான் தேவை என்பதில் மிகவும் உறுதியாக இருந்தோம்” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சி குறித்து ரியாஸ்கானை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட போது, உடனடியாக இதற்கு சம்மதம் தெரிவித்தார் என்றும், ரியாஸ்கான் நடத்தும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி இது என்றும் ராஜாமணி குறிப்பிட்டார்.

இது போன்ற ஒரு நிகழ்ச்சி இதுவரை உலகத் தமிழ் தொலைக்காட்சி எதுவும் செய்ததில்லை என்றும் ராஜாமணி தெரிவித்தார்.

12 போட்டியாளர்கள் தேர்வு

IMAG0692

பலகட்ட கடின சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர்களையே இப்போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்துள்ளது ‘வல்லவர்’ குழு.

அவர்களுக்கு பளு தூக்குதல் உட்பட பல்வேறு சவால்கள் கொடுக்கப்பட்டு உடற்திறன் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 47 பேர் கலந்து கொண்ட தேர்வுச் சுற்றில் இறுதியாக 12 பேர் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளனர். அதேவேளையில் பெண்கள் உட்பட 8 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

12 பேரில் யாராவது ஒருவரால் இறுதி நேரத்தில் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் இந்த 8 பேரில் ஒருவர் அவருக்குப் பதிலாகத் தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வல்லவர் போட்டியில் தேர்வாகியுள்ள 12 பேர் டி.பிரஷாதரன், சி.முருகன், சாந்த குமரன், சக்திவேல், நாதன் குமரகுரு, எல்.விக்னேஷ்வரன், கே.தியாகு, கே.ப்ரேம்ராஜ், ஈஸ்வரன் ராமன், இ.விக்னேஸ்வரன், தினேஷ் குமார், டேவிட் பிரகாசம் ஆகியோர் ஆவர்.

இவர்களில் சி.முருகன் பிரபல நடிகர், எல்.விக்னேஷ்வரன் நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் குறும்பட இயக்குநர்.

இவர்களைத் தவிர முன்னாள் விமானப் படை அதிகாரி, காவல்துறை அதிகாரி, மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் என பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

“எனக்கு ஏற்ற நிகழ்ச்சி” – ரியாஸ்கான் 

‘வல்லவர்’ நிகழ்ச்சி குறித்து ரியாஸ்கான் கூறுகையில், தமிழ்நாட்டு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி படைக்க தனக்கு எத்தனையோ வாய்ப்புகள் வந்தும் தான் அதை புறக்கணித்து வந்ததாகவும், ஆனால் அஸ்ட்ரோவில் இருந்து அழைப்பு வந்த போது உடனடியாக அதற்கு சம்மதித்து விட்டதாகவும் தெரிவித்தார்.

காரணம், ஒரு நல்ல நிகழ்ச்சி படைக்க வாய்ப்பு வந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம் எனக் காத்திருந்த நேரத்தில், ‘வல்லவர்’ வாய்ப்பு தனக்கு வந்ததாக ரியாஸ்கான் குறிப்பிட்டார்.

இது தனக்கு ஏற்ற ஒரு நிகழ்ச்சி என்றும் ரியாஸ்கான் தெரிவித்தார்.

மேலும், உடற்கட்டை  ஆஜானுபாகுவாக செதுக்குவது கடினம் என்றால், அதை தொடர்ந்து பாதுகாத்து வருவது அதை விட கடினம் என்றும் ரியாஸ்கான் கூறினார்.

முறையான உணவு மற்றும் உடற்பயிற்சி இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் தெரிவித்தார்.

முதல் பரிசு 25,000 ரிங்கிட்

வரும் நவம்பர் 23 -ம் தேதி தொடங்கி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு அஸ்ட்ரோ விண்மீன் எச்டி -ல் தொடர்ந்து 6 வாரங்கள் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

டிசம்பர் 28-ம் தேதி இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது. இதில் ஒட்டுமொத்த போட்டியிலும் வென்று சாம்பியன் பட்டத்திற்கு தகுதி பெறும் வல்லவருக்கு முதல் பரிசாக 25,000 ரிங்கிட் ரொக்கமும், 10,000 ரிங்கிட் மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் வழங்கப்படவுள்ளது.

முதல் நிலை வெற்றியாளருக்கு (1 ரன்னர் அப்) – 15, 000 ரிங்கிட் ரொக்கம், 10,000 ரிங்கிட் மதிப்புள்ள பரிசுப் பொருட்களும்,

இரண்டாம் நிலை வெற்றியாளருக்கு (2 ரன்னர் அப்) – 10,000 ரிங்கிட் ரொக்கம், 5,000 ரிங்கிட் மதிப்புள்ள பரிசுப் பொருட்களும்,

மூன்றாம் நிலை வெற்றியாளருக்கு ( 3 ரன்னர் அப்) – 7,000 ரிங்கிட் ரொக்கம், 4,000 ரிங்கிட் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர ஒவ்வொரு வாரமும் வல்லவர் போட்டியில் இருந்து தகுதி இழக்கும் போட்டியாளர்களுக்கு 1000 முதல் 6000 வரை ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.

இந்த வாரம் தொடங்கி ஆரம்பமாகவுள்ள ‘வல்லவர் 2014’ நிகழ்ச்சி குறித்து, இப்போதே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தி, படங்கள் – ஃபீனிக்ஸ்தாசன்