கோலாலம்பூர், நவம்பர் 18 – அமெரிக்கத் தொண்டூழியர் பீட்டர் கஸ்சிக் மற்றும் சிரியா ராணுவ வீரர்கள் தலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தமது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தீவிரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான இச்செயல் இஸ்லாமிய போதனைகளுக்கும் இஸ்லாமிய சட்ட கொள்கைகளுக்கும் எதிரான செயல் என குறிப்பிட்டுள்ளார்.
“நாகரிகமற்ற இக்கொடுஞ்செயலை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது. இது
அருவெறுக்கத்தக்க செயல்,” என்று பிரதமர் நஜிப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கரான பீட்டர் கஸ்சிக் கொல்லப்படும் காணொளிக் காட்சி இணையத்தில்
ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. மேலும், 18 சிரிய ராணுவ வீரர்கள் ஒரே
சமயத்தில் தலை துண்டித்து கொல்லப்படும் கொடூரக் காட்சியையும் ஐஎஸ்ஐஎஸ்
தீவிரவாதிகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.