புதுடெல்லி, நவம்பர் 20 – பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய 10 நாள் வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மியான்மர், ஆஸ்திரேலியா மற்றும் பிஜி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் மோடி. இன்று (வியாழக்கிழமை) காலை டெல்லி திரும்பினார்.
கடந்த 12-ஆம் தேதி மியான்மர் புறப்பட்டுச் சென்ற அவர் அங்கு நடந்த ஆசியான் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்றார். அத்துடன் மியான்மர் அதிபரையும் சந்தித்து இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
13-ஆம் தேதி மியான்மரில் நடைபெற்ற கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் பங்கேற்ற நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, சீன பிரதமர் லீ கெகியாங், ரஷ்ய பிரதமர் மெத்வதேவ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அங்கிருந்து ஆஸ்திரேலியா சென்ற நரேந்திர மோடி 14-ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டார்.
15 ஆம் தேதி மாநாட்டில் உரையாற்றிய நரேந்திர மோடி, கருப்பு பண பதுக்கலை தடுக்க அனைத்து நாடுகளும் இணைந்து ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்று ஜி 20 மாநாட்டில் கருப்பு பண பதுக்கலை தடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் நாடுகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் ஆஸ்திரேலிய தலைநர் கான்பெர்ரா சென்ற அவர், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அத்துடன் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்டையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அங்கிருந்து சிட்னி சென்ற நரேந்திர மோடி, இந்தியர்கள் சுமார் 16 ஆயிரம் பேர் திரண்டிருந்த கூட்டத்தில் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்களுடன் பங்கேற்றார்.
பின்னர் பிஜி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்ற மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றினார். அங்கு பிஜி நாட்டுடன் 3 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இதனைத் தொடர்ந்து தனது 10 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி திரும்பினார்.