கோலாலம்பூர், நவம்பர் 21 – 1970, 80 -களில் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் யானை, குரங்கு, நாய் போன்ற விலங்குகளை நடித்து வைத்து நிறைய படங்கள் வெளிவந்தன.
அதிலும் குறிப்பாக கதாநாயகனுடன் இணைந்து நாய்கள் துப்பறிவது போன்ற கதையம்சம் கொண்ட படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்து வசூலில் சக்கை போடு போட்டன.
ஆனால் அதன் பின்னர், காலம் மாற, ரசிகர்களின் மன நிலையும் மாற, அது போன்ற படங்கள் வெளிவருவது குறைந்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் அப்படி ஒரு கதையம்சத்துடன் வெளிவந்திருக்கும் படம் தான் ‘நாய்கள் ஜாக்கிரதை’
நடிகர் சத்யராஜின் நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரிப்பில் அவரது மகன் சிபிராஜ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். சிபிராஜுக்கும் இது நீண்ட நாட்களுக்குப் பிறகான படம் தான். காரணம் கடைசியாக எந்த படத்தில் நடித்தார் என்றே நினைவில் நிற்காத அளவிற்கு பல வருடங்கள் படங்கள் இல்லாமல் இருந்தார். இத்தனை நாட்கள் காத்திருப்பின் பயனாக ‘நாய்கள் ஜாக்கிரதை’ நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது என்றே கூறவேண்டும்.
பல திருப்பங்களுடன் கூடிய விறுவிறுப்பான காட்சிகள் நிறைந்த இப்படத்தில் சிபிராஜுக்கு இணையாக இன்னொரு நாயகனாக இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்ட பெல்ஜியம் ஷெப்பர்டு வகையைச் சேர்ந்த நாய் ஒன்று மிகச் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறது.
சிபி நடித்த ‘நாணயம்’ திரைப்படத்தை இயக்கிய சக்தி சௌந்தராஜன் தான் ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தையும் இயக்கியிருக்கிறார். நிஸார் சஃபி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘லாடம்’ புகழ் தரன் குமார் இசையமைத்திருக்கிறார்.
கதைச் சுருக்கம்
காஷ்மீரில் இராணுவத்தில் பயிற்சி பெற்ற சுப்ரமணி என்ற நாய், கோயம்பத்தூரில் இஸ்பெக்டராக வேலை செய்யும் சிபிராஜ், இந்த இரண்டு கதாப்பாத்திரங்களுக்கும் தனித்தனியே நிகழ்ந்த ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டாலே பயந்து ஒளியும் அளவிற்கு இரு கதாப்பாத்திரங்களும் தங்களுக்கு நிகழ்ந்த சம்பவத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் சிபிராஜிடம் சுப்ரமணி வளர வேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலை ஏற்படுகின்றது. முதலில் அதை வெறுப்பவர் தன்னைப் போலவே அதற்கும் துப்பாக்கிச் சத்த பாதிப்பு இருப்பதை அறிந்து அதன் மேல் அன்பு கொள்கிறார். அது ஒரு இராணுவ நாய் என்றே தெரியாமல் அதை வளர்க்கிறார்.
ஒருநாள் அந்த நாயின் உண்மையான திறமை தெரியவர அதை கண்டு அசந்து போகிறார். அந்த நேரத்தில் சிபிராஜின் மனைவி அருந்ததியை ஒரு கும்பல் கடத்தி கொண்டு போய்விட, அவர் எதற்காக கடத்தப்படுகிறார்? அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என தன்னிடம் உள்ள இராணுவ நாயையும், போலீஸ் நண்பர்கள் சிலரையும் வைத்து துப்பறிவதே ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் கதை.
நடிப்பு
கதாநாயகன் ஒரு போலீஸ் என்றால் முறுக்கேறிய உடம்போடு, முஷ்டி தெரிய சட்டையை மடக்கி விட்டுக்கொண்டு, முகத்தில் எப்போதும் ஒரு வித இறுக்கத்தை சுமந்து கொண்டு இருப்பார் என்ற சினிமா பார்முலாவை உடைத்து மிக சாதாரண கோயம்பத்தூர் போலீசாக இயல்பாக நடித்து இருக்கிறார் சிபிராஜ்.
வில்லனிடமே சென்று “உன்னோட உதவி இல்லாம என் மனைவிய கண்டுபிடிக்க முடியாது அவள எங்க வச்சிருக்க சொல்லு” என்று கேட்பது ஹீரோயிசம் கடந்து ஒரு சாதாரண மனிதனின் உணர்வை பிரதிபலிக்கின்றது.
நாயுடன் சிபி அடிக்கும் லூட்டி, மனோபாலா, மயில்சாமியுடனான காமெடி ரகளை.
படத்தின் இன்னொரு முக்கியக் கதாப்பாத்திரமாக பாலாஜி வேணுகோபால் வில்லனாக மிரட்டியுள்ளார். பெரிய சைஸ் கண்ணும், அவரது முகவெட்டும் அந்த கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. அவரது நடிப்பில் பல இடங்களில் கௌதம் மேனன் படத்தில் வரும் வில்லன் பாணி தெரிகிறது. என்றாலும் நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார்.
இது தவிர சிபியின் மனையியாக அருந்ததி என்ற புதுமுக நடிகை நடித்திருக்கிறார். இவர்களைத் தவிர படத்தில் பரீட்சயமான முகங்கள் இல்லை.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை
நிஸார் சஃபியின் ஒளிப்பதிவு அழகு. காஷ்மீர், ஊட்டி ஆகிய இடங்களில் படம் பிடிக்கப்பட்ட காட்சிகள் கவர்கின்றன.
பிரவீன் கேஎல் படத்தொகுப்பு செய்திருக்கின்றார். பல இடங்களில் காட்சிகள் சற்று வேகமாக நகர்ந்து படம் பார்ப்பவர்களுக்கு லேசான குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.
உதாரணமாக ஃபேக்டரியில் நடக்கும் சண்டைக் காட்சி ஒன்றில் அடியாள் ஒருவரை சிபிராஜ் ஒரு இடத்தில் கைவிலங்கிட்டு கட்டி வைக்கின்றார். திடீரென அங்கு காட்சி வெட்டப்பட்டு அவர் இறப்பது போல் காட்டப்படுகின்றது.
கைதி ஒருவரை விடுவிக்குமாறு வில்லன் கும்பலிடமிருந்து கோரிக்கை வைக்கப்படுகின்றது. அந்த காட்சியில் அந்த கைதியை சிபிராஜ் கோபத்தில் அடிக்கிறார். அதன் பிறகு அந்த கைதி எப்படி வெளியே கொண்டு வரப்படுகின்றார் என்று கூறும் இடங்களில் வேகமாக நகரும் காட்சிகள் படம் பார்க்கும் நம்மை குழப்புகின்றது.
தரன் குமாரின் பின்னணி இசையில் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. குறிப்பாக சுப்ரமணி துப்பறியும் காட்சிகளில் வரும் பின்னணி இசை மனதை தொடுகின்றது.‘மேன்ஸ் பெஸ்ட் பிரண்ட்’, ‘என் நெஞ்சில்’ போன்ற பாடல்கள் கேட்கும் ரகம்.
வித்தியாசமான திகில் கதையும், விறுவிறு திரைக்கதையும் கொண்ட ‘நாய்கள் ஜாக்கிரதை’ திரைப்படத்தை குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம்.
மொத்தத்தில் ‘நாய்கள் ஜாக்கிரதை’ – வித்தியாசமான முயற்சி
– ஃபீனிக்ஸ்தாசன்
‘நாய்கள் ஜாக்கிரதை’ முன்னோட்டம்: