Home கலை உலகம் திரைவிமர்சனம் : “வன்மம்” – வழக்கமான, பழிவாங்கல் – குத்து வெட்டு – சுவாரசியமில்லை!

திரைவிமர்சனம் : “வன்மம்” – வழக்கமான, பழிவாங்கல் – குத்து வெட்டு – சுவாரசியமில்லை!

964
0
SHARE
Ad

கோலாலம்பூர், நவம்பர் 21 – விஜய் சேதுபதி – கிருஷ்ணா நடிப்பில், இரண்டு கதாநாயகர்கள் கதையாக வந்திருக்கும் படம் ‘வன்மம்’. ஆனால், கதையிலோ, படமாக்கப்பட்ட விதத்திலோ எந்தவித புதுமையும் வித்தியாசமும் இல்லை.

Vanmam Poster 1

பார்த்துப் பார்த்துச் சலித்த அதே கதைக்களம், பல படங்களில் பார்த்த ஒரே மாதிரியான பாத்திரங்கள், நாம் எதிர்பார்த்தபடியே எந்தவித திருப்பங்களும் இல்லாமல் நகரும் திரைக்கதை, முன்பே ஊகிக்கக் கூடிய சம்பவங்கள் என படம் நகர்வதால், கண்டிப்பாகப் போய் ஒருமுறை பார்த்து வாருங்கள் என சொல்ல நா எழவில்லை.

#TamilSchoolmychoice

விஜய் சேதுபதி, கல்யாணம் ஆகாத இளைஞராக காட்டப்பட்டாலும், பார்ப்பதற்கு நடுத்தர வயது பண்ணையார் போல தோற்றமளிக்கின்றார். நேற்று வந்த இளவட்டங்கள் முதற்கொண்டு, ஐம்பதை நெருங்கும் ஷாருக்கான் போன்ற உச்ச நட்சத்திரங்கள் வரை ‘சிக்ஸ்’ பேக் – ‘ஏட் பேக்ஸ்’ என திரையில் அதகளப்படுத்த, இவரோ இன்னும் இத்தனை படங்களுக்குப் பின்னரும் தொப்பையோடு காட்சி தருகின்றார்.

முகத்திலும், அதே ரக தாடி, மீசை! சலித்து விட்டது சேதுபதி! மாற்றிக் கொள்ளுங்கள்! இல்லாவிட்டால் ரசிகர்கள் மறந்து விடுவார்கள்.

சேதுபதியின் நடிப்பிலும் வித்தியாசம் காட்டும் முயற்சிகளோ, மெருகேற்றும் முனைப்புகளோ இல்லை. அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஒரு பெண்ணைக் காட்டுகின்றார்கள். ஆனால், அவருக்கென்று காதல் காட்சிகள் இல்லை.

கிருஷ்ணா உழைத்திருக்கின்றார் 

Vanmam Krishna Sunainaகிருஷ்ணாவுக்கு பரவாயில்லை. கதாநாயகியும், நெருக்கமான காதல் காட்சிகளும் தந்திருக்கின்றார்கள். அவரும் நடிப்பிலும், சண்டைக் காட்சிகளிலும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கின்றார்.

ஆனாலும், படம் முழுக்க இருவருமே முகத்தை ஒருவித இறுக்கத்துடனே வைத்துக் கொண்டு உலா வருவது சலிப்பைத் தருகின்றது.

படத்தில் நகைச்சுவைக்  கலைஞர்கள் இல்லாததும், நகைச்சுவைக் காட்சிகள் இல்லாததும் பெரிய குறை.

சந்தானத்துக்காகவே, ரசிகர்கள் கூட்டமாக வருகின்ற தமிழ் சினிமா சூழலில், வன்மம் எனப் பெயர் வைத்துவிட்டு, இரண்டு தரப்புகளுக்கிடையிலான வெட்டு குத்து என திரைக்கதை அமைத்துவிட்டு, நகைச்சுவைக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காத இயக்குநருக்கு மறதியா, தைரியமா என்பது தெரியவில்லை.

ஜெய்கிருஷ்ணா படத்தின் இயக்குநர். நீண்ட காலமாக – 25 வருடங்களுக்கும் மேலாக, படங்களில் உதவி, துணை இயக்குநராகப் பணியாற்றி – கமல்ஹாசன் முதற்கொண்டு பலரிடம் உதவியாளராக இருந்து – இப்போதுதான் முதன்முறையாக வன்மம் படத்தை இயக்கியிருக்கின்றார்.

இத்தனை வருட அனுபவத்தைக் கொட்டியிருப்பார் என்று பார்த்தால், பல காட்சிகள் நாடகத்தனமாக, விறுவிறுப்பின்றி, எதிர்பார்த்த வசனங்களோடு நகர்கின்றன.

கதை

Vanmham-Movie-Stillsவழக்கமான இரண்டு நண்பர்கள் ஒரு கொலைச் சம்பவத்தால் மன விரிசல் கொள்கின்றார்கள். ஒரு கட்டத்தில் சில தவறுதலான வார்த்தைப் பிரயோகங்களால் இருவருக்கும் இடையில் நட்பின் விரிசல் விழ, இருவரும் பிரிகின்றார்கள்.

இருவரும் எதிர் அணிகளில் இணைகின்றார்கள். அதன்பின்னர் தொடரும் பல சம்பவங்களால், இருவருக்கும் இடையில் வலுக்கும் மோதல்கள், பெரிதாகிக்கொண்டே போகும் மனஸ்தாபம், இரண்டு தரப்பு குடும்பங்களின் பின்னணி என பயணிக்கின்றது திரைக்கதை.

வில்லன்தான் பின்புலத்திலிருந்து பல எதிர்மறையான விஷயங்களை ஏவி விடுகின்றான் என்பது நமக்கும் தெரிந்து விடுகின்றது. படத்தின் கதாபாத்திரங்களும் திரும்ப திரும்ப அதையே சொல்கின்றார்கள். அதனால், படத்தில் சுவாரசியமோ, திருப்பங்களோ இல்லை.

எவ்வளவு வெட்டுக் காயங்களோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுபவர்களும் உயிர்பிழைத்து விடுவதும், காவல் துறை அதிகாரியே உண்மைக் குற்றவாளி யார் என்பது தெரிந்து கொண்டு பயந்து கொண்டு மறைப்பதும் நம்பும் படியாக இல்லை.

கதாநாயகி சுனைனா

கதாநாயகி சுனைனா. இடுங்கிய, ஒடுங்கிய முகத்தோடு வலம் வருகின்றார். ஏனோ சோர்வாகவே காட்சி தருகின்றார். அவ்வப்போது பாடல்களிலும், கிராமத்து ஏரி, ஆற்றங்கரை குளியல் காட்சிகளிலும் லேசாக கவர்ச்சி காட்டுகின்றார். கிருஷ்ணாவுக்கு அடிக்கடி முத்தம் கொடுப்பதில் மட்டும் முனைப்பு காட்டுகின்றார். ஆனால், நமது உள்ளூரில் தணிக்கைக்காரர்களின் உபயத்தால் அத்தனைக்கும் வெட்டு விழுந்துவிட்டது…..

படத்தின் ஒரே சிறப்பு, வித்தியாசம்,  படம் முழுக்க, தடம் மாறாமல் கன்யாகுமரி மாவட்டத்தை மட்டுமே சுற்றிச் சுற்றி வருவதும், படம் முழுவதும் அந்த வட்டார மொழி முழுமையாக எல்லா கதாபாத்திரங்களும் பேசுவது போன்று அமைக்கப்பட்டிருப்பதும்தான்.

வன்மம் திரைப்படத்தின் முன்னோட்டம் 

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் கிருஷ்ணா, சேதுபதி இருவரும் நெருக்கம் காட்டும் போதே, இருவருக்குள்ளும் பிரிவு ஏற்படப் போகின்றது என்பது தமிழ்ப்பட ரசிகர்களாகிய நமக்கு தெரிந்து விடுகின்றது.

தமிழ்ப் படங்களின் முத்திரையாக மாறிவிட்ட ‘டாஸ்மாக்’ மதுபானக்கடை காட்சிகள் இல்லை, ஆனால், கிராமத்து கதை என்பதால், அந்த வட்டாரத்தின் கள்ளுக் கடைகளை காட்டுகின்றார்கள்.

ஜெய்கிருஷ்ணா, அடுத்த முறை இன்னும் ஆழமாகவும், அழுத்தமாகவும் யோசித்து, கதை, திரைக்கதை அமைப்பது நல்லது.

-இரா.முத்தரசன்