இதன் காரணமாக தற்போது சட்ட சிக்கலும் ஏற்பட்டுள்ளதாக சட்டத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சங்கப் பதிவதிகாரி தனது முடிவை அறிவிக்க ஓர் ஆண்டு எடுத்துக் கொண்டதால், மஇகா தலைமையகத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன.
அனைத்து மத்திய செயலவை முடிவுகளும் செல்லாது
குறிப்பாக, கடந்த ஓர் ஆண்டாக நடைபெற்ற எல்லா மத்திய செயலவைக் கூட்டங்களும், அதன் முடிவுகளும் இயல்பாகவே செல்லாது. குறிப்பாக ஒரு சிலர் மீது மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கை, கட்சியிலிருந்து நீக்கம் என பல முடிவுகள் இயல்பாகவே செல்லாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக, கடந்த ஓர் ஆண்டு காலத்தில் ஓர் உறுப்பினர் மஇகா மத்திய செயலவையால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தால், அவரது நீக்கம் செல்லாது.
அது மட்டுமல்லாமல், வங்கிக் கணக்கு விவகாரங்கள், வங்கியில் மஇகா பொறுப்பாளர்கள் கையெழுத்து போடும் கடிதங்கள், என பல முடிவுகள் இந்த ஓராண்டில் மத்திய செயலவையால் எடுக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் செல்லாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
வேறு என்ன முக்கிய முடிவுகள் இதுவரை மத்திய செயலவையில் கடந்த ஓராண்டாக எடுக்கப்பட்டுள்ளன என்பதை மஇகா தலைமையகம் இனிமேல்தான் ஆராய வேண்டும்.
பழைய மத்திய செயலவை மீண்டும் அதிகாரம் பெறுகின்றது
அடுத்து நடைபெறப் போகும் மத்திய செயலவையில் இப்போதுள்ள உதவித் தலைவர்களோ, மத்திய செயலவை உறுப்பினர்களோ கலந்து கொள்ள முடியாது.
பழைய மத்திய செயலவையைக் கொண்டுதான் இனி புதிய தேர்தல் குழு அமைக்கப்பட வேண்டும்.
ஆனால், அதே சமயத்தில் பழைய மத்திய செயலவையின் பதவிக் காலம் 3 ஆண்டுகள் மட்டுமே அல்லது அடுத்த கட்சித் தேர்தல்கள் நடத்தப்படும்வரை என மஇகா சட்டவிதிகள் கூறுகின்றன.
கடைசியாக மஇகா தேர்தல்கள் நடத்தப்பட்டது 2009ஆம் ஆண்டில்தான். எனவே அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவைதான் 2013 தேர்தல்கள் வரை நீடித்தது.
முறைப்படி 2012ஆம் ஆண்டில் கட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றாலும் பொதுத் தேர்தலை முன்னிட்டு எல்லா தேசிய முன்னணி கட்சிகளும் தங்களின் உட்கட்சித் தேர்தல்களை ஒத்தி வைத்தன.
அதன்படி 2013இல் கட்சித் தேர்தல் நடைபெற்றது. அதுவும் இப்போது செல்லாது என்பதால், 2009இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவையே தற்போது அதிகாரபூர்வ மத்திய செயலவையாக மீண்டும் உயிர் பெற்றுள்ளது.
ஆனால், 2009ஆம் ஆண்டு முதற்கொண்டு இன்றைய நாள் வரை – சுமார் 5 ஆண்டுகள் – ஒரு மத்திய செயலவை சட்ட ரீதியாக இயங்க முடியுமா? அதற்கு மஇகா சட்டவிதிகளில் இடம் இருக்கிறதா என்ற குழப்பமான கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
ஆக மொத்தத்தில் சங்கப் பதிவதிகாரியின் காலம் கடந்த முடிவு – மஇகாவை ஓர் இக்கட்டான – குழப்பங்களும், ஐயப்பாடுகளும் நிறைந்த ஒரு சூழ்நிலைக்குத் தள்ளி விட்டிருக்கின்றது.