Home நாடு டிசம்பர் 13ஆம் தேதி மஇகா பொதுப்பேரவை ஒத்திவைப்பு – இளைஞர், மகளிர் மாநாடுகள் – விருந்துகள்...

டிசம்பர் 13ஆம் தேதி மஇகா பொதுப்பேரவை ஒத்திவைப்பு – இளைஞர், மகளிர் மாநாடுகள் – விருந்துகள் அனைத்தும் ரத்து!

578
0
SHARE
Ad

MIC-logoகோலாலம்பூர், டிசம்பர் 6 – எதிர்வரும் டிசம்பர் 13,14ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த மஇகா ஆண்டு பொதுப்பேரவையும், அதற்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த மஇகா இளைஞர், மகளிர் பகுதிகளுக்கான மாநாடும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சங்கப் பதிவிலாகா உத்தரவின்படி மீண்டும் மஇகா தேர்தல்கள் நடத்தப்படும்வரை இந்த ஆண்டுக்கான பொதுப்பேரவை நடத்தப்படக் கூடாது என்பதால் எல்லா மாநாடுகளும் ரத்து செய்யப்படுவதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாளை மகளிர், இளைஞர் மாநாடுகள் புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெறவிருந்தன. இன்றிரவு மஇகா தலைமையகத்தில் மகளிர் பிரிவினருக்கான இரவு விருந்து அறிவிக்கப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

நேற்று சங்கப் பதிவதிகாரி, மஇகாவுக்கு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ள கடிதம் மஇகா தலைமையகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மஇகா தலைமையகம் பல்வேறு குழப்பங்களைச் சந்தித்து வருகின்றது.

மஇகா மாநாடுகளின் ரத்தால் ஆயிரக்கணக்கான ரிங்கிட் நஷ்டம் ஏற்படும் என்றும் இதுநாள் வரை மேற்கொள்ளப்பட்டு வந்த ஏற்பாடுகள் அனைத்தும் வீணாகிவிட்டன. குறிப்பாக ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுவிட்ட கட்சியின் ஆண்டறிக்கை மற்றும் கணக்கறிக்கைகள் மீண்டும் தயாரிக்கப்படும் நிலைமை ஏற்படலாம் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று காலை 11.00 மணிக்கு நடைபெறும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஇகா தலைமைச் செயலாளர் பிரகாஷ் ராவ், முழுமையான விவரங்களையும், சங்கப் பதிவதிகாரியின் உத்தரவைத் தொடர்ந்து மஇகா மேற்கொள்ளப்போகும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.