சென்னை, டிசம்பர் 15 – சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின் ஜெயலலிதா மீண்டும் கட்சி மற்றும் ஆட்சி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்ட தொடங்கி இருப்பது கட்சியினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா ஜாமீனில் வெளிவந்த பிறகும் யாரையும் சந்திக்கவில்லை. அவரை சந்திக்க முயற்சித்தவர்களுக்கு, அனுமதி கிடைக்கவில்லை. அவரது முடிவு தெரியாததால், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், திட்டங்களை செயல்படுத்த முடியாமல் சிரமப்பட்டனர்.
அரசு செயல்பாடுகள் முடங்கின, எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கின, கட்சியினரும் சோர்வடைந்தனர். தற்போது, பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்பிக்கும் பணி முடிந்துள்ளது. தற்போது, அவரது பார்வை ஆட்சி மற்றும் கட்சி மீது விழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் முதல்வர் பன்னீர்செல்வம், அவரது செயலர்கள், அரசு ஆலோசகர்கள், போலிஸ் அதிகாரிகள், பல்வேறு அமைச்சர்கள் ஆகியோரை போயஸ் கார்டனுக்கு அழைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர்கள் ஜெயலலிதாவை சந்தித்தனர். அவர்களிடம், அரசு திட்டங்களின் செயல்பாடுகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அதன்பின் அமைச்சர்களுடன், உட்கட்சி தேர்தல் குறித்து விவாதித்துள்ளார்.
அப்போது, பெண் விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர்கள் சண்முகநாதன், ஆனந்தன், ஆகியோரை கண்டித்துள்ளார். சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் பிரச்சனைக்கு சுமுக தீர்வு காணாததற்கு அமைச்சர் தங்கமணியிடம் கடுமை காட்டியிருக்கிறார்.
அதேபோல் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, ஆகியோர் செயல்பாடுகளும் விமர்சிக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து அமைச்சர்களையும் எச்சரித்து அனுப்பியுள்ளார்.