Home நாடு மஇகா தலைமையக ஆர்ப்பாட்டத்தின்போது கைகலப்பு – கார் மீது தாக்குதல்

மஇகா தலைமையக ஆர்ப்பாட்டத்தின்போது கைகலப்பு – கார் மீது தாக்குதல்

467
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 19 – மஇகா தலைமையகத்தில் நேற்று சர்ச்சைக்குரிய வகையில் நடைபெற்ற மத்திய செயலவை கூட்டத்தின் போது, வெளியே குழுமியிருந்த கூட்டத்தித்தினரிடையே சிறு அளவிலான மோதல்களும், கைகலப்புகளும் வெடித்தன.

Crowd outside MIC HQ Dec 18
நேற்று மஇகா தலைமையகம் முன்பு கூடிய கூட்டத்தினரின் ஒரு பகுதி

கூட்டம் முடிந்து மத்திய செயலவை உறுப்பினர்கள் மஇகா தலைமையகத்திலிருந்து வெளியேறிய போது ஒரு நீல நிற பிஎம்டபிள்யூ ரக காரை பலர் சூழ்ந்து கொண்டனர். அந்தக் கார் மீது சிலர் காலால் உதைத்தும், கைகளால் கண்ணாடி மீது ஓங்கிக் குத்தியும் தாக்குதல் நடத்தினர்.

அந்தக் கார் மத்திய செயலவை உறுப்பினர் குமார் அம்மானின் கார் என நம்பப்படுகிறது என மலேசியாகினி இணைய செய்தித் தளம் வெளியிட்ட செய்தி தெரிவித்தது.

#TamilSchoolmychoice

இந்த சம்பவத்தையடுத்து அங்கு கூடியிருந்த கலகத்தடுப்பு போலீசார் பாதுகாப்பு அரண் அமைத்து அந்த வாகனம் வெளியேற வழி அமைத்துக் கொடுத்தனர். மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு ஆதரவாக குமார் அம்மான் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

FRU IN MIC HQ DEC 18 -1
பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட கலகத் தடுப்பு போலிசார்

இதற்கிடையே டத்தோஸ்ரீ பழனிவேல் மஇகா தலைமையகத்தில் உள்ள சந்திப்பு அறையிலிருந்து வெளியே வந்தபோது கோபாவேசத்துடன் அவரை சூழ்ந்துகொண்ட மஇகா உறுப்பினர்கள் பலர் ‘ராஜினாமா செய், எங்களுக்கு மறுதேர்தல் வேண்டும்’ என முழக்கமிட்டனர்.

இதேபோல் மஇகா ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவரான டான்ஸ்ரீ  நிஜாரை சூழ்ந்துகொண்ட சிலர் அவரது தலையை கைகளால் தட்டியதுடன், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் குரல் கொடுத்தனர்.

இதற்கிடையே மஇகா தலைமையகத்தின் மற்றொரு பகுதியில் இளைஞர்  பிரிவின் முன்னாள் தலைவர் செனட்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அடையாளம் தெரியாத கட்சி உறுப்பினர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். மஇகா தலைமையகம் நோக்கி வரும் பாதையில் பழனிவேல் உருவப்படத்துடன் கூடிய பிரமாண்ட பதாகை ஒன்றும், அதேபோல் சிறிய அளவிலான பதாகைகள் சிலவும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ‘தயவு செய்து பதவியை விட்டு விலகுங்கள்’ எனும் வாசகம் இடம்பெற்றிருந்தது.

இத்தகைய சம்பவங்களால் மஇகா தலைமையகம் இன்று பரபரப்புடன் காட்சி அளித்ததாக மலேசியா கினி தனது செய்தியில் தெரிவித்துள்ளது.