Home நாடு மஇகா மறுதேர்தல்: பழனிவேல்-சுப்ரா, சங்கப் பதிவதிகாரியையும், உள்துறை அமைச்சரையும் சந்திப்பர்!

மஇகா மறுதேர்தல்: பழனிவேல்-சுப்ரா, சங்கப் பதிவதிகாரியையும், உள்துறை அமைச்சரையும் சந்திப்பர்!

493
0
SHARE
Ad

Palanivel-Sliderகோலாலம்பூர், டிசம்பர் 18 – இன்று நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், தானும், துணைத் தலைவர் டாக்டர் சுப்ரமணியமும் இணைந்து சங்கப் பதிவதிகாரியையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்து, மஇகா எதிர்நோக்கியிருக்கும் மறுதேர்தல் பிரச்சனைக்குத் தீர்வு காண்போம் என அறிவித்தார்.

மஇகா தலைமையகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏறத்தாழ 1,000 பேர், எதிர்ப்பு வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தி குழுமியிருந்த வேளையில், பழனிவேல் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் 50க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களும், புகைப்படக்காரர்களும் நிறைந்திருந்தனர்.

பிற்பகல் 12.30 முதற்கொண்டே ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்சித் தலைமையகத்தின் முன் கூடத் தொடங்கியிருந்தனர்.

#TamilSchoolmychoice

பதிவு ரத்தாவதைத் தடுப்போம் – பழனிவேல்

MIC-Logo-Slider“இந்த சந்திப்புகள் கூடிய விரைவில் நடத்தப்பட்டு, அடுத்த 90 நாட்களுக்குள் இந்தப் பிரச்சனைக்கு நாங்கள் தீர்வு காண்போம். காரணம், கட்சியின் பதிவு ரத்தாவதை நாங்கள் விரும்பவில்லை” என்றும் பழனிவேல் தெரிவித்தார்.

இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மத்திய செயலவை சட்டப்படி செல்லாது என எதிர்ப்புக் குரல்கள் கிளம்பிய காரணத்தால், இன்றைய மத்திய செயலவைக் கூட்டம் வெறும் ‘செயற்குழுக் கூட்டம்’ என்றே அறிவிக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் 6 முன்னாள் மத்திய செயற்குழு உறுப்பினர்களும், அவர்களின் சார்பில் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர். முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகன், முன்னாள் புத்ரி தலைவி எஸ்.உஷா நந்தினி, டத்தோ என்.முனியாண்டி ஆகியோரும் அவர்களின் வழக்கறிஞர்களும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

“இந்தப் பிரச்சனையை மேலும் தீவிரமாக அணுகி தீர்வு காண ஒரு குழுவை நாங்கள் அமைத்துள்ளோம். அதில் நானும், துணைத் தலைவரும் இடம் பெற்றிருப்போம். எங்களோடு, சங்கப் பதிவகத்திற்கு புகார் செய்தவர்களில் ஐவரும், மேலும் ஐவரும் இடம் பெற்றிருப்பார்கள்” என்றும் பழனிவேல் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

சங்கப் பதிவதிகாரியிடமும், உள்துறை அமைச்சரிடமும் நடத்தப்படும் சந்திப்புகளின் முடிவுகள் பின்னர் கூட்டு செயற்குழுவில் விவாதிக்கப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்றும் பழனிவேல் கூறினார்.

“கட்சியை நாம் ஒழுங்காக நடத்தாவிட்டால், கட்சியின் பதிவு ரத்தாகும் அபாயம் உள்ளது. எனவே நாம் கட்சியை முறையாக நிர்வாகம் செய்ய வேண்டும். இது பற்றி நான் உள்துறை அமைச்சரிடம் பேசுவேன்” என்றும் பழனிவேல் குறிப்பிட்டார்.

“மேல் முறையீடு செய்யப் போவதில்லை”

Subra-Dr-Feature---1
டாக்டர் எஸ்.சுப்பிரமணியம்

சங்கப் பதிவதிகாரி முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படுமா என்ற கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பழனிவேல், கட்சி மேல் முறையீடு செய்யாது என்றும் காரணம் இப்போது பிரச்சனைகள் கலந்து விவாதிக்கப்படும் கட்டத்திலேயே இருக்கின்றன என்றும் கூறினார்.

இன்றைய மத்திய செயலவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, எதிர்ப்பாளர்கள் சார்பில் முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டி.மோகன், கட்சியின் வியூக இயக்குநர் எஸ்.வேள்பாரி ஆகிய இருவரும் இன்றைய கூட்டம் சட்டப்படி செல்லாது என்றும் அதனால் அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளும் கடிதம் ஒன்றை பழனிவேலுவிடம் சமர்ப்பித்தனர்.

இருப்பினும், அவர்களின் கோரிக்கையை நிராகரித்த பழனிவேல், செயற்குழுக் கூட்டம் என்ற பெயரில் இன்றைய கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார். சுமார் இரண்டு மணி நேரம் இன்றைய கூட்டம் நடைபெற்றது.

வெளியே கூடியிருந்த கூட்டத்தைக் கண்காணிக்கவும், அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கவும் கலகத் தடுப்பு போலிசாரும் நிறைய அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

அறிவிக்கப்பட்டிருந்த மத்திய செயலவை கூடுவதற்கு முன்பாக எதிர்ப்பாளர்களுக்கிடையில் உரையாற்றிய முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டி.மோகனும், மற்றவர்களும் குறுகிய நேர உரைகளை ஆற்றினர். 68 வருடங்களைக் கடந்து விட்ட மஇகா மேலும் மோசமான நிலைமைக்குத் தள்ளப்படாமல் இருக்க, பழனிவேல் தனது தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என அவர்கள் தங்களின் உரைகளில் அறைகூவல் விடுத்துள்ளனர்.

வெளியே கூடியிருந்த கூட்டத்தினரிடையே அவ்வப்போது சிறு சிறு மோதல்களும் நிகழ்ந்தன.

“மறுதேர்தலுக்கான போராட்டம் ஓயாது” – டி.மோகன்

T.Mohan 418 x 215
டி.மோகன்

கூட்டத்தின் முடிவுக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த டி.மோகன், இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவும், தங்களின் குறைபாடுகளைத் தெரிவிக்கவும் தங்களுக்கு வாய்ப்பளித்த பழனிவேலுவின் திறந்த மனப்பான்மை கொண்ட தலைமைத்துவத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இருப்பினும், கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி மலாக்காவில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகளும், அதிகார வரம்பு முறை மீறல்களும் நடந்ததால், தொடர்ந்து நாங்கள் மறு தேர்தலுக்காக போராடுவோம் என மோகன் சூளுரைத்தார்.

பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமான முறையில் தீர்க்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி, கடந்த ஆண்டு கட்சித் தேர்தலை செல்லாது என அறிவிக்கும் கடிதம் ஒன்றை சங்கப் பதிவதிகாரி மஇகா தலைமையகத்திடம் வழங்கினார். கட்சியின் சட்டவிதிகள் மீறல், சங்கங்களுக்கான சட்டங்கள் முறைப்படி பின்பற்றப்படாதது, புகார்தாரர்கள் சுமத்திய முறைகேடுகள் ஆகியவற்றின் அடிப்படையில், அடுத்த 90 நாட்களுக்குள் மஇகா மறுதேர்தலை நடத்த வேண்டும் என்றும் சங்கப் பதிவதிகாரி உத்தரவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அந்தக் கடிதத்தில் காணப்படும் சில குழப்பங்களையும் தவறுகளையும் நிவர்த்திக்கும் வகையில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படும் என பழனிவேல் அறிவித்திருந்தார்.

இந்தப் பிரச்சனை தீர்க்கப்படும்வரை கட்சியின் ஆண்டுப் பேரவை ஒத்தி வைக்கப்பட வேண்டும் எனவும் சங்கப் பதிவதிகாரி உத்தரவிட்டிருந்தார்.

-பெர்னாமா