நியூயார்க், டிசம்பர் 22 – பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் முகமட் அலி நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவர் எந்த மருத்துவமனையில் உள்ளார் எனும் விவரம் தெரியவில்லை.
72 வயதான முகமட் அலிக்கு அண்மைக்காலமாக உடல்நலம் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்தது. கடந்த சனிக்கிழமையன்று நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவக்குழு ஒன்று தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் அவரது செய்தித் தொடர்பாளர் பாப் கன்னல் தெரிவித்துள்ளார்.
“நிமோனியா காய்ச்சல் தொடக்க நிலையிலேயே கண்டறியப்பட்டதால் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதால் மருத்துவமனையில் இருந்து அலி விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது,” என அறிக்கை ஒன்றில் பாப் கன்னல் கூறியுள்ளார்.
எனினும் முகமட் அலியின் தற்போதைய நிலை குறித்த கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
நீண்ட நாட்களாக பார்க்கின்சன் நோயால் அவதிப்பட்டு வருகிறார் அலி. செப்டம்பர் மாதம் கென்டகியில் நடைபெற்ற முகமட் அலி மனிதநேய விருது வழங்கும் நிகழ்வில் அவர் கலந்து கொண்டார். இதுவே அவர் கடைசியாக கலந்து கொண்ட பொது நிகழ்ச்சியாகும்.