பிரிக்பீல்ட்ஸ், டிசம்பர் 23 – ‘பிளாஷ் மாப்’ இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான கவர்ச்சிகரமான ஒரு சொல். மக்கள் அதிகம் கூடியிருக்கும் பரபரப்பான சாலைகளிலோ, விமான நிலையங்களிலோ ஒரு குழு, திடீரென நடனம் ஆடி அங்கிருக்கும் மக்களை ஒரு நிமிடம் ஆச்சர்யத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்திவிடுவார்கள்.
இந்த விளம்பர உத்தி பல்வேறு விழிப்புணர்வு பரப்புரைகளுக்கும், ஒரு விசயத்தை மக்களிடையே எளிதில் கொண்டு சேர்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், மலேசியாவின் முன்னணித் தொலைக்காட்சி நிறுவனமான அஸ்ட்ரோ, தனது நிகழ்ச்சிகளை மக்களிடையே கொண்டு சேர்க்க அனைத்து வகையான புதுமை விளம்பரங்களையும், தொழிநுட்பங்களையும் பயன்படுத்தி வருகின்றது.
தற்போது ‘விண்மீன் எச்டி’ அலைவரிசையில் ஒளிபரப்பாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் “சூப்பர் ஸ்டார்” நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றை பற்றியும், அதில் கலந்து கொள்ள விருக்கும் பிரபலங்கள் பற்றியும் மக்களிடையே அறிமுகப்படுத்த கடந்த ஞாயிற்றுக் கிழமை மதியம் பிரிக்பீல்ட்சில் திடீர் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த திடீர் நடனத்தில் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் அறிவிப்பாளர்களான டேனிஸ்குமார், யாமினி ஆகியோர், ‘ஜனனம்’ நடனக்குழுவினருடன் இணைந்து நடனமாடினர்.
இந்நிகழ்ச்சி குறித்து அஸ்ட்ரோவின் விற்பனைப்பிரிவின் மூத்த துணைத்தலைவர் ரவிக் கிருஷ்ணன் கூறுகையில், “இந்த வானவில் சூப்பர் ஸ்டார் போட்டி கடந்த 14 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது விண்மீன் எச்டி-ல் நடத்தப்பட்டு வரும் சூப்பர் ஸ்டார் போட்டியின் இறுதிச்சுற்று வரும் டிசம்பர் 27-ம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் புக்கிட் ஜாலில் அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கின்றது. இறுதிச்சுற்றின் நடுவர்களாக இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்திர், பிரபல பாடகியும், நடிகையுமான வசுந்தரா தாஸ், பாடகர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொள்ள விருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.