புது டெல்லி, ஜனவரி 2 – உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட 32 இணையதளங்களை இந்திய அரசு முடக்கியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளை ஒன்றிணைத்து இஸ்லாமிய தேசமாக அறிவித்த ஐஎஸ்ஐஎஸ், தங்கள் இயக்கத்தை வலுப்படுத்த இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இளைஞர்களை இணையத் தளங்கள் மூலம் மூளைச் சலவை செய்து தங்கள் இயக்கத்தில் இணைத்து வருகின்றது.
இந்நிலையில், இது தொடர்பான விரிவான விவரங்கள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு டுவிட்டர் மூலம் ஆதரவு திரட்டிய பெங்களூரைச் சேர்ந்த மெஹடி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற வாலிபரின் கைதின் மூலம் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, இணையம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ நினைக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒடுக்க இந்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது.
இதன் முதற்கட்டமாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாகவும், ஆள் சேர்ப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட 32 இணையத் தளங்களை இந்திய அரசு முடக்கியது.
முடக்கப்பட்ட 32 இணையதளங்களின் முகவரிகளை மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புக் குழு பரிந்துரை செய்ததாக பெங்களூருவில் செயல்படும் இணைய மற்றும் சமூக மையத்தின் இயக்குனர் பிரனேஷ் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.