Home உலகம் சீனா புத்தாண்டு கொண்டாட்ட சோகம்:  நெரிசலில் சிக்கி மலேசிய மாணவரும் பலி!

சீனா புத்தாண்டு கொண்டாட்ட சோகம்:  நெரிசலில் சிக்கி மலேசிய மாணவரும் பலி!

570
0
SHARE
Ad

shangai1ஷங்காய், ஜனவரி 2 – சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களில் மலேசிய மாணவரும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

ஷங்காய் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியாகினர். மேலும் 47 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பலியான 36 பேரில் 25 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இந்தச் சம்பவத்தில் பலியான மலேசிய மாணவர், ஹாங்சௌ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் என நம்பப்படுகிறது. எனினும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படாததால் மாணவரின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை.

“மலேசியாவில் உள்ள அம்மாணவரின் குடும்பத்தாரை தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த ஊய் ஹூய் யி என்ற 20 வயது நபரும் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

“அவருக்கு ஷாங்காயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அம்மாணவரை சீனாவில் உள்ள மலேசிய தூதரக அதிகாரிகள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். மாணவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது”.

“இந்தச் சம்பவத்தில் மலேசியர்கள் வேறு யாரேனும் காயமடைந்துள்ளனரா? என தூதகரம் விசாரித்து வருகிறது,” என மலேசிய வெளியுறவு அமைச்சு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?:

ஹுவாங்பு நதிக்கரையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள க்ளீமிங் பன்ட் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பகுதியில் இந்தப் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

புத்தாண்டுக்கு முந்தைய இரவு சுமார் 11.30 மணியளவில் இங்கு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் இருந்து ஒளி வெள்ளத்தில் மிதந்த நதியை ரசிப்பதில் பொது மக்களிடையே போட்டி நிலவியது.

shangai2அப்போது பலர் ஒரே சமயத்தில் அங்குமிங்குமாக நகர முற்பட்டதால் நெரிசல் ஏற்பட்டதால் அசம்பாவிதம் நிகழ்ந்தது என்று இச்சோக நிகழ்வை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் உள்ள இரவுக் கேளிக்கை விடுதியில் இருந்து சில அமெரிக்க டாலர் நோட்டுகளை சிலர் வீசியெறிந்ததாகவும், அவற்றை எடுக்க பலர் முண்டியடித்ததால் நெரிசல் ஏற்பட்டது என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே விபத்தில் காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கடந்த ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இதே நதிக்கரையில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குவிந்தனர்.

இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக வழக்கமாக நதிக்கரையில் நடத்தப்படும் 3டி லேசர் நிகழ்ச்சி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் கடந்து சோகம் அரங்கேறியுள்ளது.