கோலாலம்பூர், ஜனவரி 4 – மஇகா மறுதேர்தல் குறித்து சங்கப் பதிவதிகாரியின் கடிதம் குறித்து எழுந்திருக்கும் சர்ச்சைகள் குறித்து விளக்கம் பெற மஇகா தேசிய உதவித் தலைவரும், இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் நாளைக் காலை 11.00 மணியளவில் சங்கப் பதிவதிகாரியை நேரடியாகச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்ரா ஜெயாவில் உள்ள சங்கப் பதிவக அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும்.
சரவணன் நாளை சங்கப் பதிவதிகாரியை நேரடியாகச் சந்தித்து விளக்கம் கேட்கும் நிகழ்வை முன்னிட்டு, அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு நாடு முழுமையிலும் இருந்து அவரது ஆதரவாளர்களும், பல கிளை, தொகுதித் தலைவர்களும் புத்ரா ஜெயாவில் உள்ள சங்கப் பதிவகத்தின் முன் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மஇகாவுக்கு மறு தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சங்கப் பதிவதிகாரி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, விதித்திருந்த முதல் காலக் கெடு நாளையோடு முடிவடைகின்றது.
டிசம்பர் 5ஆம் தேதியிட்ட சங்கப் பதிவதிகாரியின் கடிதத்தின்படி இரண்டு கிளைகளின் மறு தேர்தல் 30 நாட்களுக்குள் நடத்தப்பட உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி அந்த காலக்கெடு நாளை ஜனவரி 5ஆம் தேதியோடு நிறைவடைகின்றது.
இந்நிலையில் சங்கப் பதிவதிகாரியின் உத்தரவை அமுல்படுத்தாமல் மஇகா தலைமைத்துவம் மௌனம் காத்துவருகிறது. சங்கப் பதிவதிகாரி இரண்டாவதாக கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளதாகவும் பத்திரிக்கைகள் ஆரூடம் தெரிவித்துள்ளன.
இத்தகைய சூழ்நிலையில், தானும் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் சுப்பிரமணியமும் சங்கப் பதிவதிகாரியை சந்திக்கப் போகிறோம் என சரவணன் இன்று கூலாய் ஜெயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின்போது பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் நாளை சரவணனுக்கும் சங்கப் பதிவதிகாரிக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பில் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் சுப்பிரமணியமும் கலந்து கொள்வாரா என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.