Home நாடு பதிவு ரத்தாகும் நிலைமைக்கு பழனிவேல் கட்சியை வேண்டுமென்றே இட்டுச் செல்கின்றார் – ரமணன் சாடல்

பதிவு ரத்தாகும் நிலைமைக்கு பழனிவேல் கட்சியை வேண்டுமென்றே இட்டுச் செல்கின்றார் – ரமணன் சாடல்

589
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 4 – சங்கப் பதிவதிகாரியின் உத்தரவுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்காமல் தவிர்ப்பதன் மூலம் கட்சியின் பதிவு ரத்தாகும் ஆபத்தான நிலைமைக்கு பழனிவேல் வேண்டுமென்றே இட்டுச் செல்கிறார் என மஇகாவின் முன்னாள் தலைமைப் பொருளாளரும், முன்னாள் மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ ஆர்.ரமணன் குறை கூறியிருக்கின்றார்.

datuk-ramanan-mic
டத்தோ ஆர்.ரமணன்

பழனிவேலுவால் மத்திய செயலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருந்த ரமணன் நேற்று முதல் அந்த நியமனப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

புதிய மத்திய செயலவை உறுப்பினர்களின் நியமனங்களையும், பொறுப்பாளர்களின் நியமனங்களையும் பழனிவேல் நேற்று அறிவித்தார்.

#TamilSchoolmychoice

கட்சியில் மறு தேர்தலை நடத்துவதற்கும், தேசியத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவதற்கும் பழனிவேல் தயங்குவதால்தான் கட்சியின் பதிவு ரத்தானாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு பழனிவேல் வந்து விட்டார் என்றும் ரமணன் குற்றம் சாட்டியுள்ளார்.

“தேசியத் தலைவருக்கான பதவிக்கு தேர்தல் இருக்கக் கூடாது என ஒரு கூட்டத்தில் பழனிவேல் சொன்னதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். கட்சியின் துணைத் தலைவரோடு சங்கப் பதிவதிகாரியைச் சந்திப்பேன் என்று கூறிய பழனிவேல் பின்னர், இரண்டு நாட்கள் கழித்து, அவரது மனைவி டத்தின் பி.கனகத்தின் ஆலோசனையின் பேரில் தனியாக சென்று சங்கப் பதிவதிகாரியைச் சந்தித்தார்” என்றும் ரமணன் கூறியிருக்கின்றார்.

ரமணன் தெரிவித்திருக்கும் கருத்துகளை மலேசியன் இன்சைடர் இணைய செய்தித் தளம் இன்று வெளியிட்டிருந்தது.

இதுநாள் வரை, பழனிவேல் நாட்டில் இல்லாத தருணங்களில் அவரது மனைவிதான் கட்சி தொடர்பான முடிவுகளை எடுத்து வந்தார் என அதிர்ச்சி தரும் தகவலையும் ரமணன் வெளியிட்டிருக்கின்றார்.

“கட்சியை வழி நடத்துவது டத்தின்ஸ்ரீ கனகம்தான். கட்சி தொடர்பான பல முடிவுகள் பழனிவேலுவின் வீட்டில் அவர் இல்லாத சமயங்களில் எடுக்கப்பட்டிருக்கின்றது” என்றும் குற்றம் சாட்டியுள்ள ரமணன் “பழனிவேலுவின் துணைவியார் கனகம் தன்னால் கட்சியை வழி நடத்த முடியும் என நம்பினால், அவர் கட்சிப் பொறுப்புக்கு போட்டியிட வேண்டும், தனது கணவரின் பின்னால் ஒளிந்து கொள்ளக் கூடாது” என்றும் கூறினார்.

சுப்ராவும், சரவணனும் கட்சியைக் காப்பாற்ற முன்வர வேண்டும்

68 ஆண்டுகால பழமை வாய்ந்த கட்சியின் பதிவு ரத்துச் செய்யப்படாமல் காப்பாற்றுவதற்கு, துணைத் தலைவர் டாக்டர் சுப்பிரமணியமும், உதவித் தலைவர் எம்.சரவணனும் முன்வர வேண்டும் என்றும் ரமணன் அறைகூவல் விடுத்தார்.

தன்னை மத்திய செயலவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியதற்காக இது போன்ற கருத்துக்களைக் கூற முற்படவில்லை என்றும் தெரிவித்த ரமணன், கட்சிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டுமென தான் வலியுறுத்தி வந்த காரணத்தினால்தான் தன்னை பழனிவேல் நீக்கி விட்டார் என்றும் தெரிவித்தார்.