மும்பாய், ஜனவரி 4 – இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் அண்மையில் பிரச்சாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பையில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சல்மான் கானுடன் பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டசும் ராஜபக்சேவுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்கு இலங்கைத் தமிழர்களும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் மும்பையில் உள்ள சல்மான்கான் இல்லத்தின் முன்பு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது சல்மான் கானுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.
ராஜபக்சேவிற்கு ஆதரவளித்த சல்மான் கானின் செயல் தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு சல்மான்கான் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சல்மான் கான் வீட்டை முற்றுகையிட முற்பட்ட போது, நாம் தமிழர் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.