Home நாடு மஇகா: சுப்ரா-சரவணன் இணைந்து சங்கப் பதிவதிகாரியைச் சந்திப்பார்கள்!

மஇகா: சுப்ரா-சரவணன் இணைந்து சங்கப் பதிவதிகாரியைச் சந்திப்பார்கள்!

780
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 4 – மஇகாவில் எழுந்துள்ள மறுதேர்தல் பிரச்சனைகளைத் தொடர்ந்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியமும் தானும் இணைந்து நாளை திங்கட்கிழமை சங்கப் பதிவதிகாரியை நேரடியாகச் சந்தித்து விளக்கம் பெறப் போவதாக கட்சியின் துணைத் தலைவரும், இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் அறிவித்துள்ளார்.

Datuk-M.-Saravanan
டத்தோ எம்.சரவணன்

இந்த அறிவிப்பிலிருந்து, ஏற்கனவே பிளவுபட்டு, இரண்டு அணிகளாகப் பிரிந்து நிற்கும் மஇகாவில் தலைவர்களிடையே கடுமையான பிளவு ஏற்பட்டிருப்பது வெளிப்படையாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தின் முடிவின்போது, இன்னும் ஒரு வாரத்தில் தானும் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் சுப்ராவும் சங்கப் பதிவதிகாரியைச் சந்தித்து பிரச்சனைக்குத் தீர்வு காணுவோம் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இருப்பினும் இதுவரை அவ்வாறு சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை. எனினும், அதன் பின்னர் பழனிவேல் தனிப்பட்ட முறையில் கட்சிக்காரர்கள் சிலருடன் சங்கப் பதிவதிகாரியைச் சந்தித்தார் என தமிழ்ப் பத்திரிக்கைகள் அண்மையில் ஆரூடம் வெளியிட்டிருந்தன. ஆனால், பழனிவேல் இதனை மறுக்கவோ, ஒப்புக் கொள்ளவோ இல்லை.

இந்நிலையில்தான், சங்கப் பதிவதிகாரியின் உத்தரவு குறித்து மஇகாவினர் இன்னும் இருட்டில் இருப்பதால், தானும் துணைத் தலைவரும் சங்கப் பதிவதிகாரியைச் சந்திப்போம் என சரவணன் அறிவித்திருக்கின்றார். பழனிவேலுவும் தங்களுக்கு இன்னும் எந்தவித விளக்கமும் தரவில்லை என்றும் சரவணன் தெரிவித்திருக்கின்றார்.

“நாளைக்குள் ஆண்டுக் கூட்டம் நடத்தாத காரணத்தால் சம்பந்தப்பட்ட இரண்டு கிளைகளும் நாளையோடு பதிவு ரத்து செய்யப்படும் என்று சங்கப் பதிவதிகாரி கடிதம் கொடுத்திருப்பதாக அறிகின்றோம். மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட தொகுதிகளும் பிரச்சனைகளுக்கு இலக்காகும்” என்றும் சரவணன் கூறியிருக்கின்றார்.

கடந்த 15 நாட்களாக தான் தேசியத் தலைவரைத் தொடர்பு கொள்ள முயன்றும் தனது செல்பேசி வழியான குறுஞ் செய்திகளுக்கும், தொலைபேசி அழைப்புகளுக்கும் இதுவரை பழனிவேல் பதிலளிக்கவில்லை என்றும் சரவணன் மனம் நொந்து கூறியுள்ளார்.

கூலாய் ஜெயாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இன்று வந்திருந்தபோது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சரவணன் இந்த தகவல்களைத் தெரிவித்ததாக ஸ்டார் ஆங்கில இணைய செய்தித் தளம் தெரிவித்திருக்கின்றது.

பல தொகுதித் தலைவர்கள் தன்னை நேரடியாக அழைத்து டாக்டர் சுப்ராவுடன் இணைந்து இந்தப் பிரச்சனையைக் கையாள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் சரவணன் குறிப்பிட்டிருக்கின்றார்.

“இப்போதே நாம் நடவடிக்கையில் இறங்காவிட்டால், மேலும் பல தொகுதிகள் பதிவு ரத்தாகும் அபாயத்தை எதிர்நோக்கும் என்றும், மார்ச் மாதத்திற்குள் மஇகாவே பதிவு ரத்து செய்யப்படும் அவல நிலை நேரலாம்” என்றும் சரவணன் எச்சரித்துள்ளார்.

மஇகா தலைவர்கள் தனித் தனியாக சங்கப் பதிவதிகாரியைச் சந்திப்போம் என அறிவித்திருப்பதால், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.