ஜாகர்த்தா, ஜனவரி 4 – விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், சம்பவம் நடந்த அன்று பயணித்த சுரபயா-சிங்கப்பூர் வழித்தடத்திற்கு முறையான அனுமதி பெறவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த ஞாயிறு அன்று 162 பயணிகளுடன் பயணித்த ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. புது வருடம் நெருங்கிக் கொண்டிருக்கையில் நடந்த இந்த சம்பவம், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமானத்தின் உடைந்த பாகங்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை தேடும் பணிகள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், விமான விபத்து குறித்து நடைபெற்ற விசாரணையில், விமானம் உரிய அனுமதி பெறாத வழித்தடத்தில் பறந்ததாக அந்நாட்டுப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இந்தோனேசிய அரசு தனது நாட்டில் இயங்கும் விமான சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும், எந்தெந்த வழித்தடத்தில் எந்தெந்த நேரத்தில் விமானங்களை இயக்க அனுமதி உண்டு என்பதைத் தெரிவிக்கும் அட்டவணை ஒன்றை வழங்கி உள்ளது.
ஏர் ஏசியா விமானம் கடந்த ஞாயிறு அன்று அனுமதி இல்லாத சுரபயா-சிங்கப்பூர் வழித்தடத்தில் சென்றுள்ளது. இதற்கான முன் அனுமதி கூட அந்நிறுவனம் பெறவில்லை. விதிகளை சரியாக மதித்து நடந்திருந்தால், இந்த கோர விபத்து நடைபெற்று இருக்காது என அந்நாட்டு விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விமான போக்குவரத்து தலைமை இயக்குனர் கூறுகையில், “விதிகளை மீறி ஏர் ஏசியா விமானம் அந்த வழித்தடத்தில் பயணித்துள்ளது. இதனால், இனி அந்த வழித்தடத்தில் பயணிக்க ஏர் ஏசியா நிறுவனத்திற்கு அனுமதி இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.