இஸ்லாமாபாத், ஜனவரி 4 – இந்தியாவின் குஜராத் கடல் எல்லை வழியாக வெடிப் பொருட்களுடன் பாகிஸ்தானை சேர்ந்த மீன்பிடி படகு ஊடுருவியதாக வெளியான தகவல்களை பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்திய குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களை குறி வைத்து, பெரிய தாக்குதலை நடத்த சதித் திட்டம் தீட்டி உள்ள தீவிரவாதிகள், இந்தியக் கடல் எல்லைகள் வழியாக ஒன்றிற்கும் மேற்பட்ட படகில் ஊடுருவி உள்ளதாக இந்திய உளவுத் துறை கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்சரித்து இருந்தது.
அதன் பேரில் நடந்த தீவிர தேடுதல் வேட்டையில், தீவிரவாதிகள் பெரிய படகில் குஜராத் கடலோர பகுதியை நோக்கி ஊடுருவ முயன்றது தெரிந்தது. அந்த படகை மடக்கிய போது, தீவிரவாதிகள் படகை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து இந்தியா, பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்து இருந்தது. இந்நிலையில், குஜராத்தில் படகு ஊடுருவல் விவகாரத்திற்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லம் கூறுகையில், “சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நாளில் கராச்சி பகுதியில் இருந்து எந்த படகும் கடலுக்குள் செல்லவில்லை. இது பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பரப்ப நினைக்கும் பிரச்சார முயற்சி” என்று அவர் கூறியுள்ளார்.
இதே கருத்தினை பாகிஸ்தான் இராணுவ வட்டாரங்களும் கூறியுள்ளன. இது தொடர்பாக பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த 31-ம் தேதி எங்கள் படையினரை சுட்டுக் கொன்ற விவகாரத்தை திசை திருப்ப இந்தியா, இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது. இது பாகிஸ்தானின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்” என்று கூறியுள்ளார்.