Home நாடு நஜிப் பதவி விலக வேண்டும்: மூத்த பத்திரிகையாளர் காதிர் வலியுறுத்து

நஜிப் பதவி விலக வேண்டும்: மூத்த பத்திரிகையாளர் காதிர் வலியுறுத்து

659
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 4 – ஆட்சியைத்  தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், அம்னோவும், தேசிய முன்னணியும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை பதவி விலக வைக்க வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் டத்தோ அப்துல் காதிர் ஜாசின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது இணையப் பக்கத்தில் எழுதியுள்ள அவர், இவ்வாறு குறிப்பிடுவது வருத்தமளித்தாலும் தமக்கு வேறு வழி தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Kadir Jasin
டத்தோ ஏ.காதிர் ஜாசின்

“பிரதமர் பதவியில் நஜிப்பை நீடிக்கச் செய்துவிட்டு எந்தப் பிரச்சினையும் இல்லை என அம்னோவும் தேசிய முன்னணியும் பாசாங்கு செய்யலாம். ஆனால் அடுத்த பொதுத்தேர்தலில் தாங்கள் புத்ராஜெயாவில் இருந்து வெளியேற்றப்படும் ஆபத்துள்ளது என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். எனவே பக்காத்தான் கூட்டணி அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை,” என்று காதிர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு நெருக்கமானவர் என அறியப்பட்டவர் காதிர். இவர் இணையத்தில் வெளியிடும் கருத்துக்கள் அனைத்தும் மகாதீரின் கருத்துக்கள் என்கிற விமர்சனமும் உண்டு.

ஒரு காலத்தின் அம்னோவின் கட்டுப்பாட்டில் உள்ள நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ஆங்கிலப் பத்திரிக்கை குழுமத்தின் ஆசிரியராகப் பணியாற்றியவர் காதிர் ஜாசின்.

பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்தை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் காதிர், தற்போது அதன் உச்சக்கட்டமாக நஜிப் பதவி விலக வேண்டும் எனவும் அறைகூவல் விடுத்துள்ளார்.

“அம்னோவிலும், தேசிய முன்னணியிலும் ஒரு மாற்றம் நிகழ வேண்டும். அது நிகழவில்லை எனில், நிலைமை மேலும் மோசமடையும். “சீஸரா அல்லது ரோம் நகரமா? என தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ரோமானியர்கள் ஆட்பட்டதைப் போன்று, நஜிப்பா அல்லது புத்ரா ஜெயாவா? என தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் அம்னோவுக்கும் தேசிய முன்னணிக்கும் ஏற்பட்டுள்ளது,” என காதிர் கூறியுள்ளார்.

அண்மைய வெள்ளப் பேரிடரின்போது நஜிப்பின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும் காதிர் மேலும் விமர்சித்துள்ளார்.