ஜாகர்த்தா, ஜனவரி 31 -கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் ஆசியா விமானத்தை அதன் கடைசி தருணங்களில் துணை விமானியே இயக்கியதாக தெரிய வந்துள்ளது.
மேலும் கட்டுப்பாட்டை இழந்த பின்னர் அந்த விமானம் மூன்றே நிமிடங்களில் கடலில் விழுந்திருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
ஜாகர்த்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தலைமை விசாரணை அதிகாரி இத்தகவலை வெளியிட்டார்.
“ஏர் ஆசியா விமானத்தின் பணியாளர்கள் அனைவரும் உரிய பணிச் சான்றிதழ் பெற்றவர்கள். மேலும் சுராபாயா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது அந்த விமானம் நல்ல நிலையில்தான் இருந்தது. விமானத்தில் உள்ள ஒலிப்பதிவு கருவி மூலம் கடைசி தருணத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தற்போது தெளிவாக தெரிய வந்துள்ளது,” என்று தலைமை விசாரணை அதிகாரியான மார்ட்ஜோனா சிஸ்வோசுவர்ணா கூறியுள்ளார்.
32 ஆயிரம் அடியில் பறந்து கொண்டிருந்த ஏர் ஆசியா விமானம், 38 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க அனுமதி கேட்டதாகவும், எனினும் 34 அடி உயரத்தில் பறக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் 32 ஆயிரம் அடியில் பறந்து கொண்டிருந்த விமானம், இடது புறமாக சாய்ந்து பின்னர் அடுத்த 30 நொடிகளில் 37,400 அடி உயரத்தை எட்டிப் பிடித்ததாக அவர் குறிப்பிட்டார்.
“இச்சமயம் விமானத்தை அனுபவம் வாய்ந்த தலைமை விமானி இயக்கவில்லை. மாறாக அவரது கண்காணிப்பில் துணை விமானியே இயக்கியுள்ளார். 37,400 அடியை எட்டிப்பிடித்த விமானம் பின்னர் அடுத்த 30 நொடிகளில் மீண்டும் 32 ஆயிரம் அடி உயரத்திற்கு கீழ் இறங்கியது. இதையடுத்து அந்த விமானம் மெல்ல கடலை நோக்கி விழத் தொடங்கியுள்ளது. மொத்தம் 3 நிமிடங்களுக்குள் விமானம் கடலில் விழுந்து மூழ்கியதாகக் கருதப்படுகிறது,” என்றார் சிஸ்வோசுவர்ணா.
இதற்கிடையே விமானம் விபத்துக்குள்ளான போது சுமார் 44 ஆயிரம் அடி உயரம் வரை மின்னல்களை உருவாக்கும் மழை மேகங்கள் அதிகம் இருந்ததாகவும், அவற்றால் விமானத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.