Home நாடு நாளை முதல் பெட்ரோல் விலை மீண்டும் குறைப்பு; ரோன் 95 ரி.1.70 – டீசல் ரி...

நாளை முதல் பெட்ரோல் விலை மீண்டும் குறைப்பு; ரோன் 95 ரி.1.70 – டீசல் ரி 2.70

618
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 31 – நாளை முதல் பெட்ரோல் விலை மீண்டும் குறைகின்றது. உலகம் எங்கும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து, உள்நாட்டிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாளை குறைக்கப்படும்.

ரோன் 95 நாளை ரிங்கிட் 1.70 ஆக குறையும் என்பதோடு, டீசல் ரிங்கிட் 2.70 ஆக குறைக்கப்படும்.

petrol

#TamilSchoolmychoice

பயனீட்டாளர்களுக்கான பெட்ரோல் உதவித் தொகை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாதா மாதம், மத்திய அரசாங்கம் உலக விலைகளுக்கேற்ப உள்நாட்டு விலைகளை நிர்ணயித்து வருகின்றது.

இந்த அறிவிப்பை இன்று மாலை துணை நிதி அமைச்சர் டத்தோ அகமட் மஸ்லான் தனது டுவிட்டர் பக்கத்தின் வழி வெளியிட்டார்.

நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் விவகார அமைச்சுகளின் சார்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

ரோன் 97 இனி ரிங்கிட் 2.00 ஆக விற்பனை செய்யப்படும். தற்போது இதன் விலை ரிங்கிட் 2.11 ஆக இருக்கின்றது.

ரோன் 95 தற்போது ரிங்கிட் 1.91ஆக விற்கப்படுகின்றது. டீசல் தற்போது ரிங்கிட் 1.93ஆக விற்கப்படுகின்றது.

உலக சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் இந்த வாரம் பீப்பாய்க்கு அமெரிக்க டாலர் 48.24 ஆக (ரிங்கிட் 175.20) முடிவுற்றது.

இருப்பினும் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிசி ரம்லி, ரோன் 95இன் விலை 1.62ஆக இருக்க வேண்டும் என்று கணித்திருந்தார். காரணம், சிங்கப்பூரில் ரோன் 95க்கு இணையான பெட்ரோல் ரிங்கிட் 1.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது என்றும் அவர் கூறியிருந்தார்.

பெட்ரோல் விலைகளின் மாதாந்திர சுயநிர்ணயம் காரணமாக மத்திய அரசாங்கம் ஒரு பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை மிச்சப்படுத்தி அதனை தனது சொந்தத் தேவைக்காக மறைமுகமாக எடுத்துக் கொள்கின்றது என்றும் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிசி ரம்லி குற்றம் சாட்டியிருந்தார்.