ஜாகர்த்தா, ஜனவரி 24 – கடலின் ஆழத்தில் அமிழ்ந்து கிடக்கும் ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் நடுப்பாகத்தை மீட்டு மேலே கொண்டு வருவதில் மீட்புக் குழுவினர் தோல்வி கண்டுள்ளனர்.
இருப்பினும் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் ஆசியா விமானத்தின் நடுப்பாகத்தை மீட்க இந்தோனேசியாவின் மீட்புக் குழுக்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஏர் ஆசியா விமானத்தின் நடுப் பாகத்திலிருந்து மீட்கப்பட்ட உடல்களுடன் மீட்புக் குழுவினர். பின்னணியில் இந்தோ னேசிய கடற்படைக் கப்பல்
சனிக்கிழமை காலை விமானப் பாகத்தை மிதவைப் பைகள் மூலம் மிதக்க விட்டு மீட்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, மேலும் 4 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டதாக இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமையின் அதிகாரி சுப்ரியாடி தெரிவித்தார்.
முன்னதாக நீண்ட முயற்சிக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை காலை விமானத்தின் நடுப்பகுதிக்குள் நுழைவதற்கான முயற்சியில் முக்குளிப்பு வீரர்களுக்கு முதல் வெற்றி கிடைத்தது. இதையடுத்தே அப்பாகத்தை கடலின் மேற்பரப்பில் மிதக்கவிட்டு மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
“விமானத்தின் நடுப்பாகத்தை மேலே கொண்டு வரவும், அதை மிதக்கவிட்டு மீட்கவும் இன்று முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதில் வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம்,” என்றார் சுப்ரியாடி.
கடலில் அமிழ்ந்திருக்கும் ஏர் ஆசியா விமானம் இருக்கும் இடத்தைச் சுற்றி மீட்புக் குழுவினரோடு வலம் வரும் படகுகள்
சனிக்கிழமை காலை முக்குளிப்பு வீரர்கள் விமானத்தின் நடுப்பாகத்தைச் சுற்றி மிதவைப் பைகளை கட்டினர். இதையடுத்து அப்பாகத்தை மிதக்கச் செய்வதற்கான முதல் முயற்சி தோல்வியடைந்து.
“விமான பாகத்துடன் மிதவைப் பைகளை இணைத்துக் கட்டப்பட்டிருந்த கயிறுகள் அறுந்துவிட்டன. அதனால் இம்முயற்சி தோல்வி கண்டது. தற்போது மீண்டும் முயற்சித்து வருகிறோம்,” என்று மீட்புப் பணியை மேற்பார்வையிடும் கடற்படை அதிகாரி ரஸ்யிட் கசோங் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த மீட்பு நடவடிக்கையின்போது மேலும் 4 பயணிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதுவரை 69 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
விமானத்தின் நடுப்பாகம் மீட்கப்பட்டால் மேலும் பல பயணிகளின் உடல்களை மீட்க முடியும் என முக்குளிப்பு வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
படங்கள்: EPA