புத்ராஜெயா, ஜனவரி 24 – உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் கேட்டுக் கொண்டதையடுத்து, குமார் அம்மான் தனது போராட்டத்தை நேற்றுடன் முடித்துக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் தனது உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டார் குமார் அம்மான்.
மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன் அவருக்கு பழச்சாறு அளித்து போராட்டத்தை முடித்து வைத்தார்.
முன்னதாக கட்சியின் நலன் கருதி குமார் அம்மான் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என பழனிவேல் வேண்டுகோள் விடுத்தார்.
“உண்ணாவிரதம் இருப்பது குமார் அம்மானின் தனிப்பட்ட முடிவாக இருக்கலாம். ஆனால் கட்சியின் நலன் முக்கியம். கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் குமார் அம்மான் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த நியமனம் குறித்து சங்கங்களின் பதிவிலாகா இப்போது கேள்வி எழுப்பியுள்ளதால், அவர்களுடன் நான் பேச உள்ளேன். எனவே குமார் அம்மான் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும்,” என பழனிவேல் வலியுறுத்தி இருந்தார்.