Home நாடு திருகுமார் வேண்டுகோளை ஏற்று போர்ட்டிக்சன் போட்டியிலிருந்து விலகினார் குமார் அம்மான்

திருகுமார் வேண்டுகோளை ஏற்று போர்ட்டிக்சன் போட்டியிலிருந்து விலகினார் குமார் அம்மான்

1086
0
SHARE
Ad
குமார் அம்மானுடன் வழக்கறிஞர் திருகுமார்

கோலாலம்பூர் – போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அன்வார் இப்ராகிமை எதிர்த்துப் போட்டியிடுவேன் என மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ குமார் அம்மான் ஏற்கனவே அறிவித்திருந்தார். எனினும் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞரும், தனது நண்பருமான திருகுமாரிடம் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அவரது வேண்டுகோளை ஏற்று போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவதில்லை என முடிவு செய்திருப்பதாக குமார் அம்மான் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் திருகுமார் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிகேஆர் கட்சிக்கான தேர்தலில் உச்சமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது முடிவை மாற்றிக் கொண்டதற்கான காரணங்களாக பின்வரும் அம்சங்களை குமார் அம்மான் குறிப்பிட்டிருக்கிறார்:

  • மஇகா பாரம்பரியமாக இந்தியர் ஒருவரை நிறுத்தி வந்த தொகுதி போர்ட்டிக்சன் என்பதால், அங்கு போட்டியிடுவதில்லை, அம்னோவுக்கு விட்டுத் தருகிறோம் என்ற மஇகாவின் அறிவிப்பு எனக்கு அதிருப்தியைத் தந்தது. அதன் காரணமாகவே அங்கு நான் போட்டியிட முன்வந்தேன். ஆனால் தற்போது அம்னோவும் போட்டியிடவில்லை என்பதால், நான் ஒதுங்கிக் கொள்ள முடிவெடுத்தேன்.
  • போர்ட்டிக்சனில் போட்டியிடும் எனது முந்தைய முடிவைத் தொடர்ந்து அங்கு இந்திய மக்களுடன் கலந்துரையாடி, கள ஆய்வுகளிலும் நான் ஈடுபட்டேன். அப்போதுதான் அங்குள்ள இந்தியர்கள் பல்வேறு தரப்பட்ட நிறையப் பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார்கள் என்றும் அவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அங்கு நாடாளுமன்ற உறுப்பினராக வருபவருக்கு மிகப் பெரிய அரசியல் பலமும், சேவைகளை வழங்குவதற்கான அரசாங்க இயந்திரங்களின் துணையும் தேவைப்படும் என்பதையும் என்னைப் போன்ற தனி மனிதர்களால் அது முடியாது என்பதை உணர்ந்தேன்.
  • அன்வார் இப்ராகிம், போர்ட்டிக்சன் இந்தியர்களுக்கு உதவக் கூடிய ஆளுமையும், அரசியல் பலமும், அரசாங்க பலத்தையும் பின்னணியில் கொண்டவர் என்ற காரணத்தால் அவரே இங்குள்ள இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய பொருத்தமான நாடாளுமன்ற வேட்பாளர் என்பதையும் உணர்கிறேன். இந்த அடிப்படையில், போர்ட்டிக்சன் இந்தியர்களின் பிரச்சனைகளை அடையாளம் காண்பதற்கும், தீர்ப்பதற்கும், அன்வார் இப்ராகிமுக்கு துணையாக நின்று தோள் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருகுமாரின் ஆலோசனைகளுக்குப் பின்னரே விலகினேன்

#TamilSchoolmychoice

“போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் குறித்து எனது நெருங்கிய நண்பரும் வழக்கறிஞருமான திருகுமார் அவர்களிடம் விரிவாகக் கலந்துரையாடி அவரது ஆலோசனைகளையும் முழு மனதோடு பெற்றேன். அவருடனான எனது கலந்துரையாடலின்போது, நான் போட்டியிடுவதால் வேட்பாளர் என்ற முறையிலும், தேர்தல் போட்டி என்ற முறையிலும் ஏற்படக் கூடிய தேவையற்ற செலவினங்களை திருகுமார் சுட்டிக் காட்டினார். சிக்கனத்தைக் கடைப்பிடித்து, செலவினங்களைக் குறைக்க அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளைக் காணும்போது, நாமும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு ஏன் இந்த செலவினங்களைக் குறைப்பதில் நமது பங்களிப்பையும் வழங்கக் கூடாது என்ற சிந்தனையை திருகுமார் என்னுள் விதைத்தார். நாட்டு நலனுக்கு முக்கியத்துவம் வழங்கும் அவரது இந்த ஆலோசனையை நான் முழு மனதோடு ஏற்றுக் கொண்டேன்” என்றும் குமார் அம்மான் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

“எனவே, எனது விலகலைத் தொடர்ந்து போர்ட்டிக்சனில் எனது போட்டி தொடர்பான அனைத்து விவகாரங்களைக் கையாள்வது, எனக்கான பேச்சாளராக இருப்பது ஆகிய பொறுப்புகளை திருகுமார் வசம் ஒப்படைத்திருக்கிறேன் என்பதையும் இந்த வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் தொடர்பில் மேலும் விளக்கங்கள் பெற விரும்புவோர் 0192777007 என்ற செல்பேசி எண்ணில் திருகுமாரைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் குமார் அம்மான் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.