Home நாடு போர்ட்டிக்சன் : அன்வார் – முகமட் ஹாசான் மோதுவார்களா?

போர்ட்டிக்சன் : அன்வார் – முகமட் ஹாசான் மோதுவார்களா?

781
0
SHARE
Ad

(15-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் போர்ட்டிக்சனில் அன்வார் இப்ராகிம் மீண்டும் போட்டியிடமாட்டார் என்னும் ஆரூடங்கள் எழுந்துள்ளன. அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹாசான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவார் என சில அம்னோ தரப்புகள் தெரிவிக்கின்றன. போர்ட்டிக்சன் தொகுதி குறித்த தனது அரசியல் பார்வையை வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

1982ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்!

பிரதமராகப் பதவியேற்ற  ஓராண்டுக்குள் (துன்) மகாதீர் முகமட் தலைமையில்  தேசிய முன்னணி நாட்டின் 6-வது பொதுத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்த காலகட்டம்.

#TamilSchoolmychoice

ஒரு நாள், மகாதீர் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு முக்கிய இளம் தலைவர்  அம்னோவில் இணைகிறார் என்றும்  பினாங்கு மாநிலத்தின் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்றும் அறிவித்தார்.

அன்றைக்கு 35 வயதான அந்த இளம் தலைவர் வேறு யாருமல்ல. அன்வார் இப்ராகிம்தான்!

அப்போது முதல் 1995ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வரை பெர்மாத்தாங் தொகுதியில் போட்டியிட்டு  வெற்றி பெற்றவர்தான் அன்வார்.

அதன்பின் அவர் சிறை செல்ல நேர்ந்த காரணத்தால்  அவருக்குப் பதிலாக அவரது துணைவியார் வான் அஸிசா பெர்மாத்தாங் பாவ் தொகுதியை  1999, 2004, 2008 பொதுத் தேர்தல்களில் வெற்றிகரமாக தற்காத்தார்.

தான் பெற்ற தண்டனையால், நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு இருந்த தடைக்கான காலம் முடிவடைந்ததும் மீண்டும் பெர்மாத்தாங் பாவ் தொகுதியிலேயே இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அன்வார்.

2013 பொதுத் தேர்தலில் மீண்டும் அந்தத் தொகுதியைத் தற்காத்தார்.

2018 பொதுத் தேர்தலில்  மீண்டும் அந்தத் தொகுதியில் அன்வார் போட்டியிட முடியவில்லை. காரணம், இரண்டாவது முறையாக சிறையில் இருந்தார். இந்த முறை பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் அன்வாரின் மகள் நூருல் இசா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வான் அஸிசா பண்டான் நாடாளுமன்ற உறுப்பினராக 2018-இல் தொகுதி மாறி போட்டியிட்டார். வெற்றி பெற்றார். துணைப் பிரதமராகவும் ஆனார்.

இரண்டாவது தடவையாக சிறையிலிருந்து வெளிவந்த அன்வார் இந்த முறை, அரச மன்னிப்பைப் பெற்று, போர்ட்டிக்சன் தொகுதியில் 2018இல் இடைத் தேர்தலை உருவாக்கி போட்டியிட்டு வென்றார்.

தொகுதி மாறுவாரா?

எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் அன்வார் போர்ட்டிக்சன் தொகுதியை விட்டு  இன்னொரு தொகுதிக்கு மாறுவார் என ஆரூடங்கள் எழுந்துள்ளன.

ஜோகூரில் அவர் போட்டியிடலாம் என்றும் பேராக் தம்புன் தொகுதியில் போட்டியிடலாம் என்றும் அல்லது சிலாங்கூர் மாநிலத்திலேயே ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும் ஆரூடங்கள் கூறப்படுகின்றன.

அதற்குக் காரணம் என்ன?

2018இல் அன்வார் போர்ட்டிக்சனில் போட்டியிட்டபோது,  அவரின் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியிலிருந்தது. போர்ட்டிக்சன் அமைந்திருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் பக்காத்தான் கூட்டணியே ஆட்சி செய்தது.

இப்போது  நிலைமை வேறு.  15ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி நெகிரி மாநிலத்தை மீண்டும் கைப்பற்ற முடியுமா என்பது கேள்விக்குறியே! அந்த அளவுக்கு தேசிய முன்னணிக்கு ஆதரவான அலை எங்கும் வீசுகிறது.

மேலும், போர்ட்டிக்சன் தொகுதியில் இந்த முறை அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் போட்டியிடுவார் என்ற தகவல்களும் உலா வருகின்றன. அதுவும் அன்வார் போர்ட்டிக்சன் தொகுதியை விட்டு மாற நினைப்பதற்கான இன்னொரு காரணம்.

சரி! முகமட் ஹாசான் 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிட போர்ட்டிக்சன் தொகுதியை ஏன் தேர்ந்தெடுப்பார்  என்பதைப் பார்ப்போமா?

ரெம்பாவ் தொகுதியில் இழுபறி?

அம்னோ  துணைத் தலைவர் முகமட் ஹசான், ரெம்பாவ் தொகுதி அம்னோ தலைவருமாவார். ஆனால், இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின். இருவருக்குமிடையில் சில அரசியல் சிக்கல்கள் தீர்வு காணப்படாமல் நீண்டு கொண்டிருக்கின்றன.

ரெம்பாவ் தொகுதியின் கீழ் வரும்  சட்டமன்றங்களில் ஒன்றான  ரந்தாவ்  தொகுதியில் பல தவணைகளாக  முகமட் ஹசான் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்திருக்கிறார்.

2018 அம்னோ தேர்தலில்  துணைத் தலைவராக வெற்றி பெற்றார் முகமட் ஹசான். அதே தேர்தலில் அம்னோ தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு சாஹிட் ஹாமிடியிடம் தோல்வி கண்டார் கைரி ஜமாலுடின்.

15 ஆவது பொதுத் தேர்தலில் முகமட் ஹாசான் நாடளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடுவார் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

ரெம்பாவ் தொகுதியை கைரி ஜமாலுடினுக்கே விட்டுக் கொடுத்துவிட்டு  புதிய தொகுதி ஒன்றில் முகமட் ஹசான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி அவர் தேர்ந்தெடுத்திருக்கும் தொகுதிதான் போர்ட்டிக்சன் எனக் கூறப்படுகிறது.

நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள எட்டு நாடாளுமன்றத் தொகுதிகளில்  மூன்று தொகுதிகளை மட்டுமே தேசிய முன்னணி கைவசம் வைத்திருக்கிறது.

ரெம்பாவ் தவிர்த்து ஜெலுபு, ஜெம்போல் ஆகியவை அந்த 3 தொகுதிகளாகும். இந்த மூன்று தொகுதிகளுமே புறநகர் தொகுதிகளாகும்.

பாரம்பரியமாக ம.இ.கா.  தொகுதியாக இருந்த போர்ட்டிக்சன் 43 விழுக்காடு மலாய் வாக்காளர்களைக் கொண்டதாகும். 33 விழுக்காடு சீன வாக்காளர்களையும் 22 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் கொண்டது போர்ட்டிக்சன்.

தேசிய முன்னணிக்கு ஆதரவான அலை வீசிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் முகமட் ஹசான் இங்கு  போட்டியிட்டால் அன்வாருக்கு  போர்ட்டிக்சன் தொகுதியில் வெல்வதற்கு  பெரும் சவாலாக இருக்கும்.

கடுமையானப் போட்டி காரணமாக மற்றத்  தொகுதிகளுக்கும்  பிரச்சாரத்திற்குச் செல்வது பக்காத்தான் ஹாரப்பான் தலைவர் என்ற முறையில் அன்வாருக்கு பிரச்சினையாக இருக்கும்.

இதனால், பழையபடி மீண்டும் பாதுகாப்பான தனது சொந்தத் தொகுதியான பெர்மாத்தாங் பாவ் தொகுதிக்கு அன்வார் மாறிச் செல்லலாம்.

அவரது மகள் நூருல் இசா தனது தாயாரின் பண்டான் தொகுதியில் போட்டியிடக் கூடும். அல்லது சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்போம் என்பதற்கேற்ப கோம்பாக் தொகுதியில் அஸ்மின் அலியை எதிர்த்து நூருல் களத்தில் குதிக்கலாம்.

15ஆவது பொதுத் தேர்தலில் மற்றொரு பிகேஆர் தலைவரான ரஃபிசி ரம்லியும் பண்டான், அம்பாங், கோம்பாக் ஆகிய மூன்று தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஃபிசி ரம்லி  பண்டான் தொகுதியின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

வான் அசிஸா இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

ஆக, அன்வார் உள்ளிட்ட பிகேஆர் கட்சியின் முக்கியத் தலைவர்கள் 15-வது பொதுத் தேர்தலில் தொகுதி மாறி நிற்கலாம் என்ற ஆரூடங்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.

-இரா.முத்தரசன்