Home Featured நாடு “மஇகாவை எதிர்த்து அரசியல் நடத்த மாட்டோம்” – நேர்காணலில் குமார் அம்மான்! (பாகம் – 1)

“மஇகாவை எதிர்த்து அரசியல் நடத்த மாட்டோம்” – நேர்காணலில் குமார் அம்மான்! (பாகம் – 1)

1170
0
SHARE
Ad

kumar-amman-featureகோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் மத்திய செயலவை உறுப்பினரும், முன்னாள் தலைமைச் செயலாளருமான டத்தோ குமார் அம்மான் ‘ஜெனராசி பாரு’ என்ற புதிய தலைமுறை கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார் என்ற அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளது முதல் அரசியல் வட்டாரங்களில் சில கேள்விகள் இயல்பாகவே எழுந்தன.

  • இன்றைய அரசியல் சூழ்நிலையில் இன்னொரு புதிய அரசியல் கட்சி தேவைதானா?
  • மற்றவர்களைப் போல் குமார் அம்மான் மஇகாவுக்குத் திரும்பாமல் ஏன் புதிய கட்சி தொடங்க வேண்டும்?
  • அதிலும் பல இன கட்சியாக வெற்றி பெற முடியுமா?
  • மஇகாவுக்கு எதிரான மற்றொரு அரசியல் மையத்தை உருவாக்கும் முயற்சியா இது?
  • இந்திய சமுதாயத்தில் இந்தக் கட்சியால் தாக்கம் எதனையும் ஏற்படுத்த முடியுமா?

என வரிசையான மனதில் எழுந்த கேள்விகளுக்கு விடை காண, ‘செல்லியல்’ சார்பாக அழைத்தபோது, நேரிலேயே வாருங்கள் விளக்குகின்றேன் என அழைத்தார், குமார் அம்மான்.

ஒரு மதிய உணவு வேளையில், அவருடன் நடத்திய நேர்காணலின் போது மேலே கூறப்பட்ட பல கேள்விகளுக்கும் பதில் அளித்தார் குமார் அம்மான். அந்த உரையாடலின் சில முக்கிய பகுதிகள்:

#TamilSchoolmychoice

புதிய கட்சி ஏன்?

செல்லியல்: மஇகாவின் தலைமைச் செயலாளராக இருந்த நீங்கள் மீண்டும் மஇகாவுக்குத் திரும்பாமல், பழனிவேல் அணிக்கு ஆதரவாக இருந்தும் அவர்களுடனும் இணைந்து செயல்படாமல் ஏன் புதிய கட்சி என்ற முடிவை எடுத்தீர்கள்?

குமார்: மஇகா தான் எனது தாய்க் கட்சி. டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலுதான் எனது அரசியல் குரு. நான் கற்ற அரசியல் பால பாடங்கள் அனைத்தும் அவரிடமிருந்துதான். பிற்காலத்தில் அவருடன் எனக்கு சில விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், அவர்தான் எனது அரசியல் குரு. எனது கட்சியின் தொடக்க விழாவுக்கும் அவரைத்தான் அழைக்கப் போகிறேன்.

Samy Vellu and Palanivel “அரசியல் ஆசான் சாமிவேலு – அரசியல் வழிகாட்டி, வாய்ப்பு கொடுத்த பழனிவேல்”

அதே போன்று, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அரசியலில் தொடர்ந்து எனக்கு வழிகாட்டியதோடு, சில வாய்ப்புகளும் தந்தார்.

ஆனால், எனது கட்சிப் பயணத்தில் நான் இரண்டு முறை மத்திய செயலவைக்கு வென்றாலும், பல போராட்டங்கள் நடத்தியிருந்தாலும், அவை அனைத்தும், இன்னொரு தலைமைத்துவத்தை ஆதரித்தும், எதிர்த்தும்தான் நடத்த வேண்டியதிருந்தது. எனது சுய சிந்தனைகளை, எனது மனதில் உள்ள விஷயங்களை பகிரங்கமாக வெளியே பேசவும். செயல்படுத்தவும் முடியவில்லை.

kumar-amman-photoஎனக்கு இப்போது 43 வயதாகிறது. அடுத்த பத்தாண்டுகளுக்கு எனது சமுதாயத்திற்காகவும், அரசியல் ரீதியாகவும், எனது தாய்மொழி தமிழின் வளர்ச்சிக்காகவும் உழைக்கவும், எனது பங்களிப்பை வழங்கவும் என்னிடம் உடல் வலிமையும், உள்ள வலிமையும் இருக்கின்றது. ஆனால், இவை அனைத்தும் மீண்டும் மஇகாவுக்கு திரும்பினால், அங்குள்ள போராட்டங்களில் கரைந்து பழையபடி எனது போராட்டங்கள் பயனற்று போய்விடுமோ, சுதந்திரமாக செயல்பட முடியாமல் போய்விடுமோ என்றும் எனது சுயத்தை இழந்து விடுவேனோ என்றும் தயங்கினேன். அதனால்தான் புதிய கட்சி.

புதிய தலைமுறைக் கட்சியின் தலைவர் என்ற முறையில் இனி எனது கருத்துகளை சுதந்திரமாகவும், யாருடைய நெருக்குதல்களும் இன்றியும் வெளியிட முடியும். செயல்படவும் முடியும்.

எனினும் இந்த நேரத்தில் உறுதியோடு ஒன்றைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். எனது தாய்க் கட்சியான மஇகாவை எதிர்த்து நானும், எனது புதிய தலைமுறைக் கட்சியினரும் கண்டிப்பாக அரசியல் நடத்த மாட்டோம்.

தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுவோமே தவிர, மஇகாவுக்கு எதிரான அரசியல் நடத்த உதயமானதல்ல புதிய தலைமுறைக் கட்சி!

புதிய கட்சியினால் தாக்கம் ஏற்படுமா?

செல்லியல்: சரி! அப்படியானால், இன்னொரு புதிய கட்சி மூலம்தான், இந்திய சமுதாயத்தில் தாக்கம் ஏற்படுத்த முடியும் என நினைக்கிறீர்களா?

குமார்: இனி எல்லா இனங்களிலும் புதிய கட்சித் தோற்றங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். மலாய் சமூகத்திலும், சீன சமூகத்திலும், சபா, சரவாக் மாநிலங்களிலும் புதிய கட்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்திய சமுதாயத்திலும் ஏற்கனவே பல கட்சிகள் இருந்தாலும், இன்னும் பல கட்சிகள் உதயமாகும்.

Kumar-Amman Fastingகுறுகிய காலம் குமார் அம்மான் மஇகா தலைமைச் செயலாளராக இருந்தபோது, சங்கப் பதிவகத்துடன் ஏற்பட்ட ஒரு சர்ச்சையில் சங்கப் பதிவக அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி ஊடகங்கள், அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை  ஈர்த்தார்…

புதிய கட்சி என்றால், ஆயிரக்கணக்கில் உறுப்பினர்களைச் சேர்த்து ஆதரவு திரட்டுவதுதான் வலிமையைக் காட்டுவது என பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். குறைந்த எண்ணிக்கை இருந்தாலும், சிறந்த தலைமைத்துவ ஆற்றல், பயன்மிக்க செயல்பாடுகள், சமுதாய நலன்குறித்த கருத்துகள், பாரபட்சமின்றி உண்மை நிலையை முன்வைத்து நடத்தும் அரசியல் ஆகிய அம்சங்கள் மூலம் ஓர் அரசியல் கட்சியை முன்னிலைப் படுத்த முடியும், நமது நாட்டு அரசியலில் முக்கிய அங்கமாக உருவெடுக்கச் செய்ய முடியும் என உறுதியாக நம்புகின்றேன்.

பல இனக் கட்சியாக வெற்றி பெற முடியுமா?

செல்லியல்: ஆனால், பல இனக் கட்சியாக நீங்கள் வெற்றி பெற முடியுமா? சாதிக்க முடியுமா?

குமார்: இன்றைய கால கட்டத்தில், நவீன சிந்தனை கொண்ட யுகத்தில் பல இனக் கட்சி என்பது காலத்தின் கட்டாயம். மசீசவில் மற்ற இன உறுப்பினர்கள் சேரலாம் என முடிவு செய்து விட்டார்கள். பிகேஆர், ஜசெக, கெராக்கான், மைபிபிபி என பல கட்சிகள் பல இன கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சபா, சரவாக் கட்சிகள் அனைத்தும் பல இனக் கட்சிகள்தான். இளைய தலைமுறையினரும் இன ரீதியான அரசியலை இனியும் விரும்பவில்லை.

Kumar Amman 2அதிலும் ‘புதிய தலைமுறை’ என முன்னோக்கிய சிந்தனைகள் கொண்ட பெயரை வைத்துக் கொண்டு பின்னோக்கிச் செல்ல நாங்கள் விரும்பவில்லை. மற்ற இனங்களில் இருந்து எத்தனை பேர் வந்து சேர்கின்றார்கள் என்பது முக்கியமுமல்ல. வெற்றியும் அல்ல. உங்கள் கட்சி காலத்திற்கேற்ற, முன்னோக்கிய சிந்தனைகளைக் கொண்டுள்ளதா, அனைவரையும் சேர்த்துக் கொள்ளும் வண்ணம் உங்களின் கட்சியில் இடமிருக்கிறதா என்பதுதான் முக்கியம். தலைமைத்துவத்தைப் பொறுத்து ஒரு கட்சியில் ஒரு குறிப்பிட்ட இனத்தினர் அதிக அளவில் இருப்பதையும் தவிர்க்க முடியாதுதான்.

அந்த வகையில், தற்போதைக்கு எங்கள் கட்சியின் துணைத் தலைவராக சீனர் ஒருவர் இருக்கின்றார். தலைமைச் செயலாளராக கோபி கிருஷ்ணன் செயல்படுகின்றார். சில மலாய் நண்பர்களும் மத்திய செயலவையில் இணைந்துள்ளார்கள்.

“புதிய தலைமுறை” செயல்பாடுகள் எப்படி இருக்கும்?

செல்லியல்: “புதிய தலைமுறை” கட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? எதை நோக்கி இருக்கும்?

குமார்: நான் முன்பே கூறியபடி, எங்களின் கட்சி மலேசியர்களிடத்திலும், குறிப்பாக இந்தியர்களிடத்திலும் இருக்கும் அரசியல், சமூகப் பிரச்சனைகளை வெளிக் கொணரவும், தீர்வு காண போராடவும் உதித்துள்ள கட்சி. இந்திய சமுதாயத்தில் இன்னும் ஏராளமான பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. மஇகா எவ்வளவுதான் போராடினாலும், மத்திய அரசாங்கத்தில் ஓர் அங்கம் என்ற முறையில் அவர்களால் சில விஷயங்கள் பகிரங்கமாகப் பேச முடியாது.

எதிர்க்கட்சிகளில் உள்ள இந்திய அரசியல்வாதிகள் சில போராட்டங்களை முன்னெடுக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கும் சில கட்சிக் கட்டுப்பாடுகள், இடையூறுகள் இருக்கின்றன.

இவர்களுக்கிடையில், சுதந்திரமாக, அச்சமின்றி, எங்களால் செயல்பட முடியும். கருத்துகளை முன்வைக்க முடியும். இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும், மலேசிய அரசியலின் மேன்மைக்காகவும் எங்களாலும் சில முனைகளில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடியும் என நம்புகின்றோம்.

உதாரணமாக, மலாக்கா ஆற்றுப் படுகையில் புதைந்திருக்கும் இந்து வரலாற்று சின்னங்களைப் பாதுக்காக்க நாங்கள் அறைகூவல் விடுத்துள்ளோம். அதற்காக நிதி உதவி ஏற்பாடுகளைச் செய்யவும் நாங்கள் முன்வந்துள்ளோம்.

  • சந்திப்பு : இரா. முத்தரசன்
அடுத்து: (குமார் அம்மான் நேர்காணலின் இரண்டாம் பாகம்)  “சுப்ராவின் தலைமைத்துவத்தை ஆதரிப்போமா?  14-வது பொதுத் தேர்தலில் நாங்கள் யார் பக்கம்?”