Home Featured நாடு “சுப்ராவை ஆதரிப்பேனா? பொதுத் தேர்தலில் எங்கள் ஆதரவு யாருக்கு?” – நேர்காணலில் குமார் அம்மான் (பாகம்...

“சுப்ராவை ஆதரிப்பேனா? பொதுத் தேர்தலில் எங்கள் ஆதரவு யாருக்கு?” – நேர்காணலில் குமார் அம்மான் (பாகம் – 2)

1158
0
SHARE
Ad

kumar-amman-photo

கோலாலம்பூர் –  புதிய தலைமுறைக் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ குமார் அம்மானுடன் செல்லியல் நடத்திய நேர்காணல் மேலும் சில முக்கிய கேள்விகளுடன் தொடர்கின்றது.

சுப்ராவின் தலைமைத்துவத்தை ஆதரிக்கிறீர்களா?

#TamilSchoolmychoice

செல்லியல்: மஇகாவுக்கு எதிரான அரசியல் நடத்த மாட்டோம் என்று கூறியிருக்கிறீர்கள். அப்படியானால், டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ராவின் தலைமைத்துவத்தை ஆதரிக்கிறீர்களா?

குமார்: டாக்டர் சுப்ராவுடன் எனக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும், அரசியல் பகைமையும் இல்லை. அவரது தலைமைத்துவ ஆற்றலை, திறமையை நான் மதிக்கின்றேன்.

subra-dr-mic-photo

மஇகாவின் தலைமைத்துவத்தை ஏற்றவுடன் அவருக்கிருந்த சில மிகப்பெரிய சவால்களையும், சோதனைகளையும், சட்ட சிக்கல்களையும் வெற்றிகரமாகத் தாண்டிவந்து கட்சியை ஒரு நிலைப்படுத்தியுள்ளார். ஓரளவுக்கு ஒற்றுமை ஏற்படுத்தியுள்ளார்.

அதே சமயம் இன்றைய சிக்கலான சமூக, அரசியல் சூழ்நிலையில் நமது சமூகம் ஒரு கட்சியை மட்டுமே நம்பி அரசியல் நடத்த முடியாது. பல முனைகளிலும் நாம் போராட வேண்டியதுள்ளது. பலவிதமான அரசியல் தேவைகள், அபிலாஷைகள் நமது மக்களுக்கு இருக்கின்றன.

மஇகா, மைபிபிபி, கெராக்கான் போன்ற தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகள் பேச முடியாத, முன்னெடுக்க முடியாத சில விவகாரங்களை நாங்கள் முன்னெடுப்போம்.

kumar-amman-featureஅதே போன்று, பிகேஆர், ஜசெக, போன்ற எதிர்க்கட்சிக் கூட்டணிகளில் உள்ள நமது இந்திய அரசியல் தோழர்கள் சில காரணங்களுக்காக சில விவகாரங்களை முன்னெடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். அந்த வெற்றிடத்தையும் நாங்கள் நிறைவு செய்வோம்.

எனவே, தெளிவாக ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். மஇகாவில் சுப்ராவின் தலைமைத்துவத்தை நான் ஆதரிக்கின்றேன். அவர் இந்திய சமுதாயத்திற்காக, எடுக்கின்ற நல்ல பணிகளில் நாங்கள் துணை நிற்போம். ஆதரவு கொடுப்போம்.

அவரது தலைமைத்துவத்தில் தவறுகள் இருந்தால், குறைகள் இருந்தால் அவற்றை சுட்டிக் காட்டவும் செய்வோம். ஆனால், அது அவர் மீதான தனிமனிதத் தாக்குதலாக இருக்காது. மாறாக, இந்திய சமுதாயத்தின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் மொழி சார்ந்த விவகாரமாகத்தான் இருக்கும்.

முடிவாக, இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கான போராட்டத்தில் இன்னொரு துப்பாக்கிக் குழலாக, அரசியல் ரீதியாக, மஇகாவுக்கு உதவியாக செயல்படுவோமே தவிர, சுப்ராவின் தலைமைத்துவத்திற்கு எதிராகப் போராடுவது எங்களின் நோக்கமுமல்ல.

14-வது பொதுத் தேர்தலில் ஆதரவு யாருக்கு?

general-election-14

செல்லியல்: அடுத்த 14-வது பொதுத் தேர்தலில் தங்களின் கட்சி, தேசிய முன்னணியை ஆதரிக்குமா அல்லது எதிர்க்கட்சி கூட்டணியை ஆதரிக்குமா?

குமார்: அது குறித்து முடிவெடுக்க காலம் இன்னும் கனியவில்லை என்று கருதுகின்றேன். 14-வது பொதுத் தேர்தலில் பங்கெடுப்பதா அல்லது ஓர் அணியினருக்கு ஆதரவு தருவதா என்பது குறித்து உரிய நேரத்தில், கட்சியின் மற்ற தலைவர்கள், தொண்டர்களோடு இணைந்து கலந்தாலோசித்து முடிவெடுப்போம்.

  • சந்திப்பு – இரா.முத்தரசன்
(குமார் அம்மான் நேர்காணல் பாகம் -1) – “மஇகாவை எதிர்த்து அரசியல் நடத்த மாட்டோம்” – நேர்காணலில் குமார் அம்மான்!