கோலாலம்பூர் – மலாக்கா ஆற்றின் ஆழத்தில் புதைந்து கிடப்பதாகக் கூறப்படும் புராதன மஜபாஹிட் இந்து சின்னங்கள் மீதான ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்படும் நிதியை வழங்குவதற்கு தயார் என புதிதாகத் தோற்றம் கண்டுள்ள புதிய தலைமுறைக் கட்சி அறிவித்துள்ளது.
நமது எதிர்கால தலைமுறைகள் நமது வரலாற்றை புரிந்து கொண்டு பெருமைப்படும் வண்ணம், இந்தியா, சீனாவிலிருந்து நிபுணத்துவ மற்றும் தொழில்நுட்ப உதவியைப் பெற்றுத் தர மலாக்கா மாநிலத்திற்கு உதவத் தாங்கள் தயாராக இருப்பதாக புதிய தலைமுறைக் கட்சியின் தோற்றுநரும், தலைமைச் செயலாளருமான கோபி கிருஷ்ணன் (படம்) தெரிவித்தார்.
“ஆற்றின் ஆழத்திலுள்ள படுகைகள், ஆலயங்களின் அமைப்புகள், எஞ்சியுள்ள புராதன சின்னங்களையும் புகைப்படம் எடுக்கவும் அவற்றை வரைபடமாகத் தயாரிக்கவும் இந்த நிதி உதவி பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் இந்த வரலாற்று சின்னங்கள் ஆவணப்படுத்தப்படவும், மின்னியல் (டிஜிடல்) வடிவில் பாதுக்காக்கப்படவும் முடியும் என்பதோடு அவற்றை அருங்காட்சியகத்தில் வைத்து அனைவரும் பார்க்கும் வகையில் பாதுகாக்கவும் முடியும்” என இன்று வியாழக்கிழமை விடுத்த அறிக்கை ஒன்றில் கோபி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2013-இல் மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், மலாக்கா மாநில மஇகா தலைவருமான டத்தோ எம்.எஸ்.மகாதேவன் விடுத்த அறிக்கையின்படி உருவாக்கப்படவிருந்த மலாக்கா இந்திய அருங்காட்சியகம் அமைக்கப்படுவதற்கான நிதி உதவிகளையும் வழங்குவதற்கும் தாங்கள் தயாராக இருப்பதாக அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மலாக்கா ஆற்றின் ஆழத்தில் காணப்படும் மஜபாஹிட் புராதன சின்னங்கள், சிலைகள், ஆலயங்கள் ஆகியவற்றை மாநில அரசாங்கம் அகழ்வாராய்ச்சி மூலம் அகற்றக் கூடாது என்றும் கேட்டுக் கொண்ட கோபி கிருஷ்ணன், அவை இருந்த இடத்திலேயே பத்திரப்படுத்தப்பட்டு, இருந்த இடத்திலேயே வரலாறாக அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் புதிய தலைமுறைக் கட்சி சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆற்றின் அடிப்பகுதியில் இருக்கும் புராதன சின்னங்கள் ஏறத்தாழ இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு விரிந்து இருக்கக் கூடிய ஆலயக் கட்டிடமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அதனை அகழ்வாராய்ச்சி மூலம் வெளிக் கொணர்வது மிகுந்த செலவு பிடிக்கக்கூடிய ஒன்றாகவும், கஷ்டமானதாகவும் இருக்கும் என்றும் கோபி கிருஷ்ணன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவேதான், அந்த புராதன சின்னம் அப்படியே இருந்த இடத்திலேயே பாதுக்காக்கப்பட கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் கோபி கிருஷ்ணன் கூறினார்.