கோலாலம்பூர் – ‘வல்லினம்’ வருடம் தோறும் மேற்கொள்ளும் பல்வேறு கலை இலக்கிய முயற்சிகளின் முத்தாய்ப்பு தினமாகக் கலை இலக்கிய விழா கொண்டாடப்படுகிறது.
8-ஆம் ஆண்டு கொண்டாட்டமான இவ்வருட நிகழ்ச்சி மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டு, நாளை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 13) பிற்பகல் 2.00 மணி முதல், தலைநகர் ஜாலான் ஈப்போ (தற்போது சுல்தான் அஸ்லான் ஷா சாலை) சாலையிலுள்ள கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் நடைபெறுகின்றது.
ஆளுமைகளும் ஆவணங்களும்
மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்திற்குப் பங்காற்றிய மா.சண்முகசிவா, அரு.சு.ஜீவானந்தன், சை.பீர்முகம்மது, கோ.புண்ணியவான் ஆகியோரின் ஆவணப்படங்கள் இவ்வருடம் வல்லினம் குழுவினரால் தயார் செய்யப்பட்டுள்ளது.
நான்கு நேர்காணல்களும் வெவ்வேறு கோணத்தில் பதிவு செய்யப்பட்டன. இந்த ஆவணப்படத்தில் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் மிக அரிய சில புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. சிறந்த ஆவணத்தின் தன்மைகளை உருவாக்க வேண்டுமென திட்டமிட்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
விமர்சன நூல்
பொதுவாகவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் பாராட்டுவதற்கென்றே உருவாக்கப்படுகின்றன. அதன் மூலம் ஒரு படைப்பாளனின் எல்லா படைப்புகளும் பாராட்டத்தக்கவை என மேம்போக்காகக் கொண்டாடப்படுகின்றன. ‘வல்லினம்’ இவ்வாறான மனநிலைக்கு எதிரான போக்கைக் கொண்டுள்ளதால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு படைப்பாளிகளின் சிறுகதைகளும் முழுமையாக வாசிக்கப்பட்டு அவற்றை ஒட்டிய விமர்சனக் கட்டுரைகள் எழுதப்பட்டன.
மா.சண்முகசிவா சிறுகதைகள் குறித்து க.கங்காதுரையும், அரு.சு.ஜீவானந்தன் சிறுகதைகள் குறித்து ம.நவீனும், கோ.புண்ணியவான் சிறுகதைகள் குறித்து அ.பாண்டியனும் சை.பீர்முகம்மது சிறுகதைகள் குறித்து மஹாத்மனும் தத்தம் கருத்துகளை வைத்து, விவாதித்து, விமர்சனங்களை முன்வைத்து விரிவாக எழுதியுள்ளனர்.
அவ்வாறான விமர்சனத்தில் ஒவ்வொரு எழுத்தாளரின் சிறுகதைகளில் இருந்தும் மிகச்சிறந்ததாக இரண்டு சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இக்கதைகளில் சில செறிவாக்கப்பட்டும் பெயர் மாற்றம் பெற்றும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு தொகுக்கப்பட்டன.
இந்நூல் அடுத்தடுத்து விவாதங்களை உருவாக்கவும் அதன் வழி மேலும் பல நல்ல படைப்புகளை அடையாளம் காணவும் துணை செய்யும் எனும் நம்பிக்கையில் இம்முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
மொழிபெயர்ப்பு நூல்
தமிழ் வாசகர்கள் மத்தியில் பரவலான அறிமுகம் இக்கதைகளுக்கு இருப்பதாலும் தமிழில் பதிப்பிக்க இன்னும் பிற சாத்தியங்கள் உள்ளதாலும் ஆங்கிலத்தில் இக்கதைகளை மொழியாக்கம் செய்து உலக வாசகர்கள் மத்தியில் மலேசியத் தமிழ்ப் படைப்பாளிகளைக் கொண்டு செல்ல வல்லினம் முனைப்புக்காட்டியுள்ளது.
சிறுகதைப்போட்டி
மூத்த படைப்பாளிகளை முன்னிலைப்படுத்தும் அதேவேளை புதியப் படைப்பாளிகளையும் கண்டடைய இவ்வாண்டு வல்லினம் திட்டமிட்டுள்ளது. அவ்வகையில் சிறுகதைப்போட்டி நடத்தப்பட்டது. சுமார் 132 எழுத்தாளர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.
இந்தப் போட்டியில் பங்கெடுத்தவர்களுக்கு முன்னமே வல்லினம் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. எழுத்தாளர் ஜெயமோகன் வழிநடத்திய இந்தக் கலந்துரையாடலில் போட்டியில் பங்கெடுத்த 40 எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர்.
எனவே வல்லினம் இந்தப் போட்டியைச் சடங்கு பூர்வமானதாக அல்லாமல் எழுத்தாளர்களை உருவாக்கும் பெரும்பணியாக முன்னெடுக்கிறது. வெற்றிப்பெற்ற எழுத்தாளர்களுக்குப் பரிசுகள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படும்.
நாஞ்சில் நாடன் வருகை
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் (படம்) இம்முறை கலை இலக்கிய விழாவில் கலந்துகொள்கிறார். மொழிபெயர்க்கப்பட்ட நான்கு எழுத்தாளர்களின் 8 கதைகள் குறித்து அவர் உரையாற்றுவார். சிறுகதையின் நுட்பங்கள் குறித்து அமையும் அவரது உரையால் எழுத்தாளர்கள் புதிய வழிகாட்டல்களை அறிவர்.
நிறைவாக…
தனிமனிதர்களால் பெரும் முயற்சிகள் தவறுகளோடு நடக்க வாய்ப்புள்ளவை. வல்லினத்தில் இப்பெரும்முயற்சி கூட்டு உழைப்பால் உருவானது. மலேசிய இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச்செல்லும் ஒரு பணியில் அதன் கருத்தோடு ஒத்திசைந்தவர்கள் வல்லினத்திற்குத் தொடர்ந்து கைகொடுக்கிறார்கள். தமிழ் இலக்கிய வாசகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய வேண்டும்.