Home நாடு ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா (GTLF) 2023

ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா (GTLF) 2023

965
0
SHARE
Ad

ஜார்ஜ் டவுன் : ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா (GTLF) என்பது பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள ஜார்ஜ் டவுன் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் இலக்கிய விழா ஆகும். இவ்விழா மலேசியாவில் நடைபெறும் மிகப் பெரிய உலக இலக்கிய விழாவாகக் கருதப்படுகிறது. மேலும், இது லண்டன் புக் ஃபேர் இன்டர்நேஷனல் எக்ஸலன்ஸ் இலக்கிய விழா விருதைப் (LBF International Excellence Awards) பெற்ற தென்கிழக்கு ஆசியாவின் முதல் இலக்கிய விழா. உலக இலக்கியம், மொழிபெயர்ப்புகள், பல்வேறு கலைகள் என நான்கு நாள் விழாவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் கடைசி வார இறுதியில் கொண்டாடப்படுகிறது.

பல்வேறு நாடுகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர். மலேசியாவில் மாநில அரசால் நிதியளிக்கப்பட்ட ஒரே இலக்கிய விழா இதுவாகும். 2011 முதல் நடைபெற்று வரும் இவ்விழா பதின்மூன்றாம் ஆண்டாக நவம்பர் 23 முதல் நவம்பர் 26 வரை நடைபெற உள்ளது. அதோடு கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும் தமிழ் இலக்கியத்திற்கு இரண்டு அமர்வுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவ்வருட ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவின் கருப்பொருள் ‘அறியப்படாத உலகம்’ ஆகும். சொற்கள் அற்புத ஆற்றல் வாய்ந்தவை. அவை நம்மைக் கற்பனைக்கு அப்பாற்பட்ட தேசங்களுக்கும் அறியப்படாத அனுபவங்களுக்கும் நம்மை அழைத்துச் செல்கின்றன. அவ்வகையில் இவ்வாண்டு இலக்கிய விழா சமகால இலக்கிய உலகின் பல்வேறு நிலப்பரப்புகளுக்கு வாசகர்களைச் கொண்டு செல்லவுள்ளது. எல்லையற்ற கற்பனையை அடித்தளமாகக் கொண்ட இக்கருப்பொருள், நமக்குத் தெரியாததையும், அறிந்தும் அறியாதவற்றையும் ஆராய அழைக்கிறது.

#TamilSchoolmychoice

13 நாடுகளைச் சேர்ந்த 35 எழுத்தாளர்கள் பங்கேற்கும் இந்த மாபெரும் விழாவில் பிரிட்டிஷ் நாவலாசிரியர் ஜியோஃப் டியெர் (Geoff Dyer), SEA விருது பெற்ற தாய்லாந்து எழுத்தாளர் வீராபோன் நீதிபிரபா (Veeraporn Nitiprapha) மற்றும் உதிஸ் ஹேமாமூல் (Uthis Haemamool), Miles Franklin இலக்கிய விருதை வென்ற மிஷால் டெ க்ரெத்செர் (Michelle de Kretser), கவிஞரும் பன்முக கலைஞருமான பர்மியப் படைப்பாளி மவுங் டாய் (Maung Day ), தமிழ் இலக்கியவுலகில் நன்கு அறியப்பட்ட கவிஞரும் எழுத்தாளருமான யுவன் சந்திரசேகர், பன்முக கலைஞரும் எழுத்தாளருமான தைவானைச் சேர்ந்த வூ மிங் யீ (Wu Ming-yi) மற்றும் அமெரிக்க ஊடகவியல் மற்றும் பன்னாட்டுத் தொடர்பாடல் பேராசிரியர் ஜெனட் ஸ்தில் (Janet Steele) ஆகியோர் சிறப்பு வருகையாளர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

முற்றிலும் இலவச நிகழ்ச்சியான இவ்விழாவினை மலேசிய இலக்கியப் பரப்பில் நன்கு அறியப்பட்ட பெளலின் ஃபான் (Pauline Fan) மற்றும் அட்ரியான நோர்டின் மானான் (Adriana Nordin Manan) ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர்.

ம.நவீன்

இவ்விழாவின் தமிழ் மற்றும் சீன இலக்கிய அரங்குகளுக்கு முறையே எழுத்தாளர் ம. நவீனும், சீன இலக்கிய விமர்சகரும் மலாயா பல்கலைக்கழக விரிவுரையாளருமான முனைவர் ஃப்ளோரன்ஸ் குயெக்கும் (Florence Kuek) பொறுப்பேற்றுள்ளனர்.

மேலும் இவ்விழாவில் பல விருதுகளையும் சிறப்புகளையும் வென்ற உள்நாட்டு எழுத்தாளர்கள் சிலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில், 2023க்கான தேசிய கவி விருது பெற்ற, பேராசிரியர் லிம் சுவி தின் (Professor Lim Swee Tin), 2019 காமன்வெல்த் சிறுகதை போட்டி வெற்றியாளர் சரஸ் மாணிக்கம், 2018 ஃபிராஸ் இலக்கிய விருது (Prix du Premier Roman) வெற்றியாளர் ஷிஹ் லி கெள( Shih-Li Kow) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவ்விழா Loft 29 Gat Lebuh Gereja மற்றும் Mano Plus on Beach Street ஆகிய இரண்டு இடங்களை விழா அரங்காகக் கொண்டு நடைபெறவுள்ளது. எழுத்தாளர்களுடன் நேரடி சந்திப்பு, குழு விவாதங்கள், வாசிப்பு, நூல் அறிமுகம், கண்காட்சிகள், திரைக்காட்சிகள் போன்ற பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இவ்விழாவின் மற்றுமோர் அங்கமாக GTLFவின் ‘மூவாரா’ தொகுப்பு நூல் வெளியீட்டையும் வாசகர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கலாம். மலேசியாவின் இளம் எழுத்தாளர்களின் தரமான படைப்புகளோடு, தென்கிழக்காசிய நாடுகளின் எழுத்தாளர்களின் படைப்புகளும் உலகின் பிற நாடுகளின் எழுத்தாளர்களின் படைப்புகளையும் உள்ளடக்கிய தொகுப்பாக அந்த நூல் இருக்கும். இந்நூலுக்கு, வான் நேர் அஸ்ரிக், டெபோராஹ் அகுஸ்தின் ஆகியோர் தொகுப்பாசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர். இவ்வாண்டு ’மூவாரா’ Inisiatif Buku Darul Ehsan (IBDE) எனும் பதிப்பகத்தின் வழி வெளியீடு காணும்.

இலவசமாக நடைபெறும் இந்த விழாவில் தமிழ் இலக்கியத்தின் இணை இயக்கமாக வல்லினம் இணைந்துள்ளது. மலேசிய சிங்கை எழுத்தாளர்கள், தமிழக எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கான அரங்குகள் என நவம்பர் 25, 26 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பினாங்கு நிகழ்ச்சிக்கு வரும் இலக்கிய ஆர்வளர்களுக்கான தங்கும் வசதிகளை வல்லினம் ஏற்பாடு செய்யும். எனவே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் இலக்கிய ஆர்வளர்கள் ம. நவீனை (0163194522) என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.