Home Photo News “முன்னேற்றத்திற்குத் தொடக்கச் சூழல் அடிப்படை அல்ல! இலக்குகளே  முதன்மையானவை!” – முத்து நெடுமாறன்.

“முன்னேற்றத்திற்குத் தொடக்கச் சூழல் அடிப்படை அல்ல! இலக்குகளே  முதன்மையானவை!” – முத்து நெடுமாறன்.

709
0
SHARE
Ad

பூச்சோங் : பூச்சோங்கில் 1956-ஆம் ஆண்டு முதற்கொண்டு அளப்பரிய சமூகத் தொண்டாற்றி வருகிறது சுத்த சமாஜ இயக்கம். கடந்த செப்டம்பர் 2-ஆம் நாள் சனிக்கிழமை, தனது சேவை மையத்தில் தங்கி பயின்றுவரும் மாணவர்களுக்க்காக, கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. நாடறிந்த தொழில்நுட்ப வல்லுனரும், தமிழ்க் கணிமை உலகின் முன்னோடியுமான கணிஞர் முத்து நெடுமாறன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவர்களுக்குத் தன்முனைப்பு உரையொன்றை ஆற்றினார்.

மையத்தில் தங்கியிருக்கும் சுமார் 60 மாணவர்களிடையே அவர்களின் எதிர்காலப் பயணங்கள், சாதிக்கக் கூடிய சாதனைகள், தாண்டக் கூடிய எல்லைகள் பற்றி முத்து நெடுமாறன் பேசினார். தமது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களின் வழி அவர் பெற்றப் படிப்பினைகளை எடுத்துக் காட்டி, அவர் உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் சுத்த சமாஜம் அமைப்பின் தலைவர் டத்தோ அம்பிகா சீனிவாசன், உதவித் தலைவர் டத்தோ வி.எல்.காந்தன், தேவகுஞ்சரி துன் சம்பந்தன் முதலியோரும் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

அன்னை மங்களம் அவர்களின் தலைமையில் 1961 முதல்  இயங்கி வரும் பூச்சோங் சுத்த சமாஜம் பல்வேறு மாணவர்களுக்கு அடைக்கலம் தரும் ஆதரவு கூடமாக இருந்து வந்திருக்கிறது. அங்கு தங்கியிருந்து பயிலும் மாணவர்கள் ஏழ்மையும் பின்னடைவான சமூக சூழலையும் பெரும்பாலும் கொண்டவர்கள். அவர்களும் வாழ்க்கையில் தன்னம்பிக்கையோடு முன்னேற வேண்டும் – நமது சமுதாயத்தின் ஓர் அங்கமாக திகழ வேண்டும் – என்ற நன்னோக்கங்களுக்காக -மாணவர்களுக்கு இது போன்ற எழுச்சியும் தன்னம்பிக்கையும் தரும் உரைகளை சில பிரமுகர்களைக் கொண்டு வழங்க முன் வந்ததாக அம்பிகா மாணவர்களிடையே உரையாற்றும் போது தெரிவித்தார். அந்த வரிசையில் முத்து நெடுமாறனின் உரை முதல் உரையாடலாக அமைந்தது என்றும் கூறினார்.

“எங்கிருந்து தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல”

முத்து நெடுமாறன் தனதுரையில் தன் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களைச் சுட்டிக் காட்டி சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து தான் முன்னேறி வந்த கதையை சுவையுடன் மாணவர்களுக்கு விளக்கினார்.

“எனது தந்தை கவிஞர் முரசு நெடுமாறன் தமிழாசிரியராகத் தோட்ட தமிழ்ப்பள்ளியில் பணியாற்றி வந்தார். தோட்டப்புறத்தில், எளிமையான குடும்பத்திலிருந்து வந்த நானும், பிற்காலத்தில் அமெரிக்கா முதல் அனைத்துலக நாடுகளில் பல முதல் தர உலக தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றும் அளவுக்கு உயர்வடைந்தேன். இதன் வழி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் எங்கிருந்து வாழ்க்கையை தொடங்குகிறோம், நமது பின்னணி என்ன என்பதெல்லாம் முக்கியமல்ல. எந்த இலக்குகளை நோக்கி நம் வாழ்க்கையை செலுத்துகிறோம் – செதுக்குகிறோம் – என்பதுதான் முக்கியம்! வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கல்விதான் மிகப்பெரிய ஆயுதம். எனவே அதைக் கைவிடாமல் நீங்கள் கல்வியில் முன்னேற வேண்டும்” என்றும் அவர் தன்னுரையில் மாணவர்களை கேட்டுக் கொண்டார்.

சிறப்பாகப் படித்த காரணத்தால் பல்கலைக்கழகத்தில் மின்சார, மின்னியல் துறையில் பட்டப்படிப்பு படிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்த போது சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கல்வி உதவி நிதி கிடைக்க காந்தன் உதவி செய்ததையும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி

“பல்கலைக் கழகப் பட்டப்படிப்பு முடிந்ததும், நான் பெற்ற கல்வி உதவி நிதி காரணமாக, சிலாங்கூர் மாநிலத்தில் பணியாற்ற வேண்டிய நிபந்தனை இருந்தாலும் – அப்போது இருந்த மந்தமான பொருளாதார சூழ்நிலைக் காரணமாக “எங்களால் உங்களுக்கு வேலை தர முடியாது. நீங்கள் தனியார் துறையில் வேலை செய்து கொள்ளலாம்” என சிலாங்கூர் மாநில அரசாங்கம் என்னை விடுவித்து விட்டார்கள். அதுவும் நன்மையாகவே அமைந்தது. இதன் காரணமாக நான் பல்வேறு தனியார் நிறுவனங்களில் இணைந்து வேலை செய்தேன். சிங்கப்பூரில் சன் மைக்ரோ சிஸ்டம்ஸ், ஆரக்கல் போன்ற மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றினேன். எனது உழைப்பு, பணிகள் காரணமாக எனக்கு பதவி உயர்வுகள் கிடைத்தன. உயர் பதவிகள் வகித்தேன். அதன் காரணமாக உலக நாடுகள் பலவற்றிற்கும் தொழில் காரணமாக நான் சென்று வந்தேன். அமெரிக்காவுக்கு அடிக்கடி சென்ற போது அங்கு என்னை கவர்ந்த தொழில்துறை முன்னோடி, ஆப்பிள் நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவரான, ஸ்டீவ் ஜாப்ஸ் ஆவார். அவரின் சிந்தனைகளும் அறிவுரைகளும் என்னைப் பெரிதும் ஈர்த்தன. அவரின் தொழில்முறைச் சிந்தனைகளை வழிகாட்டலாகக் கொண்டு நானும் என் தொழில் துறையில் செயல்பட்டேன். முன்னேறினேன். அவரின் மிகச் சிறந்த நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தில் எப்படியாவது நான் பணியாற்ற வேண்டும், அந்த நிறுவனத்திற்கும் எனது பங்களிப்புகளை வழங்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டேன். பிற்காலத்தில் அதுவும் நிறைவேறியது.

நேரடியாக வேலை செய்யாவிட்டாலும், அவர்கள் உருவாக்கும் கணினிகளுக்கும் கையடக்கக் கருவிகளுக்கும், இந்திய இந்தோ-சீன மொழிகளுக்கான எழுத்துருக்களை உருவாக்கவும், தமிழ் உள்ளிடுமுறைகளை உருவாக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

எனவே, நீங்கள் ஒரு துறையில் ஆர்வத்துடன், தெளிவான இலக்கோடு செயல்பட்டால் – கடுமையாக உழைத்தால் – உங்கள் இலக்கை நீங்கள் அடைய முடியும். வெற்றிகளைக் குவிக்க முடியும் என்பதற்கு இன்று உங்கள் முன் நிற்கும் நானே ஓர் எடுத்துக் காட்டாகும்” என்றும் முத்து நெடுமாறன் மாணவர்களிடையே தெரிவித்தார்.

கணினியில் தமிழ் மொழியைப் புகுத்தும் முயற்சி

“ஆரம்ப காலகட்டத்தில் கணினியில் தமிழ் மொழியை புகுத்த வேண்டும் என முயற்சிகள் எடுத்து அதில் வெற்றியும் பெற்றேன். இன்று முரசு அஞ்சல் என்ற தமிழ் எழுத்துருக்கள் கணினிகளையும் கைப்பேசி போன்ற கையடக்க கருவிகளையும் அதன் திரைகளில் அலங்கரிக்கின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதிய புதிய முயற்சிகளை கணினி தமிழில் நான் மேற்கொண்டு வருகிறேன். நான் தமிழ் பள்ளிக்கு செல்லாவிட்டாலும் என் தந்தையார் ஒரு தமிழறிஞர் என்பதால் எனக்கு தமிழை ஆர்வத்துடன் கற்றுத் தந்தார். நானும் மிக இளமையிலேயே கற்றுக் கொண்டேன்” எனவும் முத்து நெடுமாறன் குறிப்பிட்டார்.

“திருக்குறளை வழிகாட்டியாகக் கொள்ளுங்கள்”

“நீங்கள் எல்லாம் நமது தமிழ் அறநூலானத் திருக்குறளை மறவாமல் படிக்க வேண்டும். போற்ற வேண்டும். இங்கு ஒரு மாணவன் ஒருவன் தோன்றின் புகழோடு தோன்றுக … எனும் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்பித்தது கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பல திருக்குறள் பாக்கள் எனது வாழ்க்கையை செப்பனிட்டு, பல சமயங்களில் எனக்கு வழிகாட்டியாக இருந்திருக்கின்றன. அவற்றில் இந்தத் தோன்றின் புகழொடு தோன்றுக … எனும் குறளும் ஒன்று” என்று கூறி அந்தக் குறளுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தெளிவாக விளக்கங்களைக் கொடுத்தார் முத்து நெடுமாறன்.

குறள்களை மனனம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு நான் ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு திருக்குறளை மனனம் செய்வேன். பின்னர் மாலையில் அதே குறளை மீண்டும் படித்து நினைவு கூர்ந்து கொள்வேன். முதலில் எனக்கு அந்தக் குறள்களின் பொருள் தெரியவில்லை. என் தந்தை என்னிடம் அடிக்கடி கூறுவார் – நீ முதலில் குறளையோ  கவிதைகளையோ மனப்பாடம் செய்து கொள் – கால ஓட்டத்தில் அதன் பொருள் தானாகவே உனக்கு புரியும் என்பார். அதன்படி அந்த குறள் வரிகளை நான் அன்று இளம் வயதில் மனப்பாடம் செய்தேன். இன்று அவற்றின் பொருள் எனக்கு இயல்பாகவே விளங்குகிறது.”

“சாதாரண தோட்டப்புற சூழ்நிலையில் இருந்து வந்த நான் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் முன்னேற முடியும் என்றால் அதைவிட பன்மடங்கு வசதிகளை செய்து தரும் இந்த அமைப்பில் தங்கி இருந்து பயிலும் உங்களைப் போன்ற மாணவர்களுக்கு மேலும் கூடுதலான வாய்ப்புகள் கண்டிப்பாக காத்திருக்கின்றன.

“நீங்கள் எங்கிருந்து வருகிறோம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். இன்றைய சூழ்நிலையை எண்ணி கவலைப் படாதீர்கள். எங்கு செல்லப் போகிறோம் – எதை நோக்கி வாழ்க்கையைச் செலுத்தப் போகிறோம் – என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மிகப்பெரிய பாரம்பரியமும் தொன்மையும் கொண்ட இனம் நமது தமிழினம். தமிழர்கள் நம்மால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. எந்த இனத்திற்கும் நாம் சளைத்தவர்களோ தரம் குறைந்தவர்களோ அல்ல! எனவே நீங்கள் உங்களை மெருகுப்படுத்திக் கொள்வதிலும் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதிலும் கவனம் செலுத்துங்கள்.”

வாழ்க்கையின் வேட்கையைக் கண்டறியுங்கள்

“வாழ்க்கையில் உங்களுக்கு எது மிகவும் பிடிக்கிறது – எதில் உங்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்பதை – இப்போதிருந்தே தேடத் தொடங்குங்கள். உங்களின் தேடல் நிச்சயம் உங்களுக்கு புதுப்புது வழிகளை –  வாய்ப்புகளை – உருவாக்கும். நீங்கள் உங்கள் எண்ணத்தையும் சிந்தனையையும் ஒருமுகப்படுத்தி செலவிட்டால் ஓர் இலக்கை நோக்கி கடுமையாக உழைத்தால் உங்களால் சாதிக்க முடியாதது என்பது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. இதை எப்போதும் நினைவில் கொண்டு உங்கள் வாழ்க்கையில் வெற்றி நடை போடுங்கள். உண்மையான உழைப்பு இருந்தால், உண்மையானத் தேடல் இருந்தால், வாய்ப்புகள் தானாக வரும். இது உறுதி!” எனவும் முத்து நெடுமாறன் தன்னுரையில் மாணவர்களுக்கு அறிவுறுத்தி ஊக்கம் கொடுத்தார்.

உரைக்குப்பின் நடைபெற்ற கலந்துரையாடலின்போது மாணவர்கள் சிலர் கேட்ட கேள்விகளுக்கும் முத்து நெடுமாறன் பதிலளித்தார்.