Home நாடு ஏர் ஆசியா QZ8501 : ஆயுதப்படை இல்லாமலும் தேடுதல் பணி தொடரும் – மீட்புக்குழு அறிவிப்பு

ஏர் ஆசியா QZ8501 : ஆயுதப்படை இல்லாமலும் தேடுதல் பணி தொடரும் – மீட்புக்குழு அறிவிப்பு

860
0
SHARE
Ad

babbangஜகார்த்தா, ஜனவரி 29 – இந்தோனேசிய ஆயுதப் படை (டிஎன்ஐ) உதவி இல்லாவிட்டாலும்,  ஏர் ஆசியா QZ8501 விமானத்தில் இருந்த மீதமுள்ள 92 பயணிகளின் சடலங்களையும் மீட்க தேடல் மற்றும் மீட்புக் குழு தொடர்ந்து செயல்படும் என பாசரனாஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டின் தேசிய தேடல் மற்றும் மீட்புக் குழுவின் (பாசரனாஸ்) தலைவர் பாம்பாங் சோலிஸ்டோ கூறுகையில், “ஊடகங்கள் கூறுவது போல் மீட்புப் பணிகளை நிறுத்துவதற்காக இந்தோனேசிய ஆயுதப் படை (டிஎன்ஐ) பின்வாங்கவில்லை. மீட்புக் குழுவின் தலைவரான நான் தேடும் பணியை நிறுத்த உத்தரவும்  பிறப்பிக்கவில்லை. தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

“தேடல் மற்றும் மீட்புக் குழுவிற்கென பிரத்தியேகமாக ஆழ்கடல் உபகரணங்களை வைத்து தேடும் முறைகள் உள்ளன. இந்த ஆழ்கடல் தேடுதல் வேட்டை நடத்த  எஸ்கேகே மிகாஸ் என்ற தனி கப்பல் உள்ளது” என்றும் பாம்பாங் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து தேடுதல் பணிகள் நடந்து வந்ததால், தேடல் மற்றும் மீட்புக் குழுவினருக்கு இரண்டு நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதாகவும் பாம்பாங் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 70 பயணிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டிருக்கும் நிலையில், அதில் 55 பயணிகளின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பாம்பாங் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 28-ம் தேதி, இந்தோனேசியாவின் சுரபாயா விமான நிலையத்தில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் ஆசியா QZ8501 விமானம், ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது.

அண்மையில், விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டறியப்பட்டுள்ள நிலையில், விபத்திற்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருகின்றது.