நேற்று மதியம் மஇகா தலைமையகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தார் சரவணன். அப்போது மஇகா தேசியத் தலைவர் குறித்து கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார்.
அப்போது அவரது கைப்பேசியில் வந்த அழைப்பை எடுத்து பேசியவர், சட்டென அந்த அழைப்பினூடே நிகழ்ந்த உரையாடலை தன் முன்னே இருந்த ஒலிப்பெருக்கியில் ஒலிக்கச் செய்தார்.
எதிர்முனையில் மலாய் மொழியில் பேசிய நபர், சரவணனை கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுக்க, அங்கு கூடியிருந்தோர் மத்தியில் பரபரப்பு நிலவியது.
சரவணனும் சற்றும் அசராமல், “அப்படியா? சரி… தைரியம் இருந்தால் என்னை சுடுங்கள்…. நீங்கள் என்னைக் கொலை செய்வதை பத்திரிகையாளர்களும் பார்க்க விரும்புகிறார்கள்,” என்றார்.
இவ்வாறு அவருக்கு இருமுறை கொலை மிரட்டல்கள் வந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், தமக்கும், டாக்டர் சுப்ரமணியத்திற்கும் ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு பழனிவேல்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.
“இப்படிச் சொல்ல காரணம், இந்தக் கொலை மிரட்டலை விடுத்திருப்பது குமார் அம்மனின் ஆட்கள்தான். அது இப்போது தெளிவாகத் தெரிந்துவிட்டது,” என்றும் சரவணன் மேலும் கூறினார்.