கோலாலம்பூர், ஜனவரி 29 – “டிஸ்லெக்சியா” எனப்படும் உடல் நலக் குறைபாடு குறித்து நீண்ட காலமாக ஆய்வில் ஈடுபட்டு வரும் மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரான டாக்டர் முல்லை ராமையா (படம்) இந்த குறைபாடு குறித்து மாணவர்களிடையே விரிவான சோதனைகளை நடத்தியிருப்பதோடு, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தேவையான பயற்சிகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றார்.
இது குறித்த அவரது ஆய்வுக் கட்டுரைகளில் ஒன்றை வாசகர்களின் பயன்பாட்டிற்காக இங்கே வழங்குகின்றோம்:
“இந்நாட்டில், நம்முடைய தமிழ்ப் பள்ளிகளில், சிறப்பாகத் தேறும் பிள்ளைகளுக்கே அதிக ஆதரவும் மதிப்பும் தரப்படுகிறது. சிறப்பாகத் தேறும் பிள்ளைகள் போற்றப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இருப்பினும், முழுக் கவனத்தையும் அவர்கள் மேல் செலுத்தி, UPSR- தேர்வில் சிறப்பாகத் தேறவேண்டுமென்று பள்ளிகளுக்கிடையில் நடக்கும் போட்டியில், எதையுமே வாசிக்க, எழுத முடியாமல் பின்தங்கியிருக்கும் மாணவர்களின் குறையை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்யாமை தவறு.
மலேசியாவில், பள்ளி செல்லும் மாணவர்களுள், ஆயிரத்தில் 50 பேர் டிஸ்லெக்சியா என்னும் வாசிப்பு மற்றும் எழுதும் திறன் குன்றியிருக்கும் நரம்பியல் பிரச்சனையால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். மொத்தத்தில் சுமார் 314,000 பள்ளி செல்லும் மாணவர்கள் இந்தக் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று மலேசிய டிஸ்லெக்சியா மன்றம் கூறுகிறது. அதில், சுமார் 160,000 ஆரம்பப்பள்ளி மாணவர்கள், பின்தங்கிய மாணவர்கள் என்று அரசாங்கக் கணக்கெடுப்பு காட்டுகிறது.
பிள்ளைகள் தகவல், கல்வி மேம்பாட்டு மையம் (CHILD), ஆய்வுக்கு உட்படுத்திய 10 ஆரம்பத் தமிழ்ப் பள்ளிகளில், 10 முதல் 20 சதவிகித மாணவர்கள் பின்தங்கிய நிலையில் உள்ளதாகக் கூறுகிறது.
டிஸ்லெக்சியா குறைபாட்டினால் பாதிப்புற்று பின்னர் அதிலிருந்து மீண்டு, சாதனையாளர்களாக உயர்ந்தவர் என இவர்களைக் கூறுவார்கள்…
அவ்வமைப்பு மேலும் கூறுவதாவது: “நாட்டின் 525 பள்ளிகளின் நிலைமையும் இதுதானா அல்லது இதைவிட மோசமானதா என்பதை நிர்ணயிக்க இயலவில்லை. இந்தப் பிரச்சனையை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், இவர்கள் எதிர்காலத்தில் குறைந்த வருமானம் தரக்கூடிய கூலி வேலைகளைச் செய்து கொண்டு, முதலாளிமார்களால் பல வழிகளில் துன்புறுத்தப்படும் தொழிலாளர்களாகவும், நாளடைவில் சட்டத்தின் கையில் சமூக விரோதிகளாகவும் மாறி விடுவர். இப்பிரச்சனையைத் தவிர்க்க, இவர்களுக்குத் தேவைப்படும் கல்வியை எப்பாடு பட்டாவது இப்போதே வழங்கிவிடுவதன் வழி, இவர்களால் நாடும் நாமும் எதிர் நோக்க இருக்கும் பிரச்சினைகளைத் தவிர்க்க இயலும்.”
ஆய்வுகளில் வெளிப்படும் அதிர்ச்சி தரும் உண்மைகள்
சுவீடன், அமெரிக்கா போன்ற நாடுகளில் குற்றவியல் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் சில அதிர்ச்சி தரும் உண்மைகளை வெளியிட்டுள்ளன.
கொலை, கொள்ளை போன்ற கொடும் குற்றங்களுக்குத் தண்டனை பெற்றுச் சிறையில் வாடும் பலரிடம் குறிப்பாக 30 வயதுக்கு உட்பட்டவர்களிடம் இத்தகைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றினின்று நாம் அறிபவை:
1. பல குற்றவாளிகள் தமது குற்றக் காரியங்களின் விளைவைச் சற்றும் உணராமல் திடீரென்று உணர்ச்சி வேகத்தில் அக்குற்றங்களைப் புரிந்துள்ளனர். இத்தகைய விளைவுணராமைக்கும், உணர்ச்சி வேகத்திற்கும் (Impulsivity) காரணம் அவர்களது டிஸ்லெக்சியா என்ற குறையே!
2. இத்தகைய குற்றவாளிகளில் 40 முதல் 70 விழுக்காட்டினர் டிஸ்லெக்சியா குறையுடையவர்களாக உள்ளனர்.
3. இவ்வாறு சிறையில் வாடும் குற்றவாளிகள் தவிர டிஸ்லெக்சியா குறையுடைய வேறு சிலர் மனவியல் பள்ளிகளுக்கும் அனுப்பப் படுகின்றனர்.
4. ஆரம்ப நிலையிலேயே இளமைப் பருவத்திலேயே டிஸ்லெக்சியா குறையைக் கண்டுபிடித்து நிவர்த்தி செய்தால் இவர்கள் குற்றவாளிகளாவதைத் தவிர்க்கலாம்.
5. டிஸ்லெக்சியா என்ற குறைபாடு இந்த இளைஞர்களிடையே வாழ்க்கையில் நம்பிக்கையின்மையை அதிகரித்து இவர்கள் சிறையில் வாடும் அளவிற்கு வளர்த்து விடுகிறது.
6. இவர்கள் இளமையிலேயே பள்ளியிலிருந்து விலகி அல்லது வெளியேற்றப் பட்டுத் தீய வழிகளுக்கு இரையாகின்றனர்.
மேல் உள்ள ஆராய்ச்சி ஓர் சிறு எடுத்துக்காட்டே! இன்னும் பல மேல் நாட்டு ஆராய்ச்சிகள், குற்றவியலுக்கும் டிஸ்லெக்சியாவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பைக் காட்டுகின்றன. இவற்றைக் கொண்டு பார்க்கும்போது நம்நாட்டிலும் குற்றச்செயல்களுக்கும் குற்றவாளிகளின் பள்ளித் தோல்விக்கும் நிறையத் தொடர்பிருக்கிறது என்று நம்பினால் அது மிகையாகாது.
டிஸ்லெக்சியா உடைய மாணவர்களின் மற்றோர் இயல்பு, இவர்களில் பலரால் கணிதமும் செய்ய இயலாது (Dyscalculia). இப்படியாகக் கல்வியின் அடிப்படைத் திறன்களான வாசித்தல், எழுதுதல், கணிதம் என்ற 3 திறன்களிலும் எவ்விதத்திலும் வெற்றியடைய முடியாத மாணவர்களின் நிலைமை என்ன?
டிஸ்லெக்சியா பாதிக்கப்படும் மாணவர்களின் சோக நிலைமை
டிஸ்லெக்சியா உடைய மாணவர்கள் தாங்களாகவே தங்களுடைய இயலாமையைப் போக்கிக் கொள்வது பெரும்பாலும் முடியாத ஒன்று. யாராலும் கவனிக்கப்படாத நிலையில் வெளியில் உள்ள தீய சக்திகள் அவர்களைக் கவர்ந்து இழுக்கின்றன. அறியாமை, தன்னம்பிக்கை இன்மை, சமுதாயத்தால் (பள்ளியால்) ஒதுக்கப்பட்ட உணர்வு, எதிர்காலத்தைப் பற்றிய அச்சம், இவையே வன்முறையாளர்கள் ஊடுருவுவதற்கான விளைநிலம்.
பள்ளியைவிட்டு ஏன் பிள்ளைகள் விலகுகிறார்கள் அல்லது தூக்கி எறியப்படுகிறார்கள்? பள்ளிச் சூழலில் அவர்கள் பொருந்தாத ஓர் அங்கமாகி விடுவதால் தான்! பள்ளிக் கூடமும் அதன் சூழலும் வெற்றியாளர்களுக்கும் அல்லது வெற்றியை நோக்கிப் போய்க் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் என்று ஆகிவிடும்போது தங்களுக்கு அங்கு இடமில்லை என்பதை மாணவர்கள் உணர்ந்து பதின்ம வயதின் உணர்ச்சிப் பெருக்கைக் கையாளத் தெரியாமல் செய்வதறியாது அவ்விடத்தைவிட்டு வெளியேறுகின்றனர். ஒன்று எடுபிடிகளாக சிறு பணிகள் செய்கின்றனர்; அல்லது அரவணைப்புத் தரும் வன்முறையாளர்களிடம் சரணடைகின்றனர்.
பள்ளியால் வெளியேற்றப்படும் மற்றவகை மாணவர்கள். தன்னைக் கண்டுகொள்ளாத பள்ளியில் தன் இருப்பை நிரூபிக்க சின்னச் சின்ன வன்முறையில் இறங்கி அதனால் பள்ளியிலிருந்து நீக்கப்படுபவர்கள். பெரும்பாலும் இந்த இரண்டு வகை மாணவர்களின் பிற்புலங்கள் மிகுந்த பிரச்சனையுடையவையாக உள்ளன. ஏழ்மை, உடைந்த குடும்பச் சூழல், ஆரோக்கியமற்ற வாழ்சூழல் ஆகியவையே இந்தப் பிரச்சனைகள். இதனால் வீட்டிலும் அவர்களுக்கு ஆதரவற்ற நிலை உருவாவதால் அவர்கள் வன்முறையாளர்களின் வசமாகின்றனர்.
பார்க்கும் திறனும் கேட்கும் திறனும் குறையற இருந்தும் 6 ஆண்டு கால ஆரம்பப் பள்ளியை விட்டுச் சான்றிதழ் பெற்றோ பெறாமலோ வெளியேறும் மாணவனால் வாசிக்க எழுத இயலாவிட்டால் அது யார் குற்றம்?
UPSR தேர்வில் ‘A” பெறும் பிள்ளைகளைச் சற்று மிகையாகவே கொண்டாடும் நாம், ஏன் அதே இனத்தைச் சேர்ந்த ஒரு சாராரை கண்டுகொள்வதில்லை?
(‘டிஸ்லெக்சியா’ குறித்த விரிவான ஆய்வுக் கட்டுரையொன்றை முனைவர் முல்லை ராமையா எதிர்வரும் ஜனவரி 31ஆம் தேதி மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு ஆய்வரங்கில் சமர்ப்பிக்கின்றார். டிஸ்லெக்சியா தொடர்பில் மேலும் விளக்கங்கள், தகவல்கள் பெற விரும்புவோர் முனைவர் முல்லை ராமையாவை கீழ்க்காணும் இணைய அஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்)