காந்திநகர், ஜனவரி 12 – குஜராத்தில் உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் தொடங்கி வைத்தார்.
குஜராத் மாநிலத்துக்கு முதலீட்டை ஈர்ப்பது தொடர்பாக இந்த மாநாடு நடைபெறுகிறது. ‘எழுச்சி மிகு குஜராத்’ என்ற மாநாட்டை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் தொடங்கி வைத்தார். மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகித்தார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி பங்கேற்றுள்ளார். மேலும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
நாளை மோடியை ஜான் கெர்ரி சந்தித்து பேச உள்ளார். அப்போது இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகத் தொடர்பை முன்னெடுத்து செல்வது குறித்து விவாதிக்க உள்ளனர்.
அத்துடன் இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இதை 5 மடங்காக அதிகரிப்பது குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
அம்பானி 5 ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு:
அடுத்த 5 ஆண்டில் குஜராத் மாநிலத்தில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று காந்திநகரில் நடந்துவரும் 7-வது எழுச்சி மிகு குஜராத் மாநாட்டில் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் அதிக அளவில் முதலீடு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.