பாரீஸ், ஜனவரி 12 – பிரான்சில் கடந்த 7-ம் தேதி சார்லி ஹெப்டோ இதழுக்கு எதிராக தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. 12 பேர் பலியான இந்த சம்பவத்தினை தொடர்ந்து,
மர்ம நபர்கள் காவல்துறையினர் மீது நடத்திய தாக்குதல், பல்பொருட்கள் அங்காடியில் பொதுமக்கள் சிறைபிடிப்பு, உணவகங்களில் வெடிகுண்டுத் தாக்குதல் போன்ற பல்வேறு தீவிரவாத செயல்களால் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.
இந்நிலையில், தீவிரவாதத்திற்கு எதிராக பிரான்ஸ் வீதிகளில் லட்சக்கணக்கானோர் திரண்டனர். அந்நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்த நகரமான தவுலவுசில் 80 ஆயிரம் பேரும், தென்மேற்கு நகரமான பாவ் நகரில் 40 ஆயிரம் பேரும்,
மேற்கு நகரமான நான்டிசில் 30 ஆயிரம் பேரும், தென்கிழக்கு நைஸ் நகரில் 23 ஆயிரம் பேரும், மத்திய ஆர்லியன்ஸ் நகரில் 22 ஆயிரம் பேரும், கிழக்கு பெசன்கான் நகரில் 20 ஆயிரம் பேரும் திரண்டு வந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஒரே சமயத்தில் பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கானோர் திரண்டதால், அங்கு மிகுந்த பதற்ற நிலை நிலவியது. மக்கள் கூட்டத்தை சாதகமாகப் பயன்படுத்தி தீவிரவாதிகள் நாசா வேலைகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாக பிரான்ஸ் அதிபர் பிரான்கோசிஸ் ஹாலன்டி எச்சரித்து இருந்தார்.
இதற்கிடையே பிரான்ஸ் தாக்குதலுக்கு அல் கொய்தா இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாகவும், பல்பொருட்கள் அங்காடியில் காவல்துறையினரின் பிடியில் சிக்காமல் தப்பி ஓடிய பெண் தீவிரவாதியால், பெரும் பயங்கரம் காத்திருப்பதாகவும் அந்நாட்டு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.