கோலாலம்பூர், ஜனவரி 13 – கடந்த ஜனவரி 9 மற்றும் 10ஆம் தேதி மாலை கோலாலம்பூர் நெகாரா உள்அரங்கில் கோலாகலமாக நடைபெற்ற சீகா எனப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் நிகழ்ச்சிகள் படைக்க மலேசியக் கலைஞர்களுக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் இடம் அளித்திருந்தனர்.
பல திறமை வாய்ந்த கலைஞர்கள் மலேசியாவில் உள்ள போதும் அதில் மிகக் குறைவானவர்களுக்கே விருது விழாவில் கலை நிகழ்ச்சி படைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனாலும், சைக்கோ யுனிட், ஓஜி நண்பா, எஸ்ஒய்எல் ஸ்குவாட், சிவா ஆகிய ராப் இசைக் குழுவினர் விழாவில் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தி அரங்கில் இருந்த மலேசிய இளவட்டங்களை மகிழ்ச்சிபடுத்தினர்.
உலக சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரையில் மலேசியக் கலைஞர்கள் என்றால் அது ராப் இசைக் கலைஞர்கள் என்ற எண்ணம் நிலவுவது ஒரு வகையில் நன்மை தான். அதுவே நமது தனித்துவமாக கருதப்படுகின்றது.
என்றாலும், இங்கு நாடகத்துறையிலும், நாட்டியத்துறையிலும், பாடலிலும் பல அனுபவமிக்க திறமைசாலிகள் இருப்பதும் உலகிற்கு தெரியவர வேண்டும்.
எதிர்காலத்தில் மலேசியாவில் இது போன்ற விருது விழாக்களை நடத்தும் ஏற்பாட்டுக் குழுவினர் அதை உணர்ந்து மலேசியக் கலைத்துறையில் பல பிரிவுகளிலும் திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து, விழாக்களில் பங்குபெறும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பது மலேசியக் கலைத்துறையின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக இருக்கும்.




படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்